‘யெல்லோ’ –  விமர்சனம்!

‘கோவை ஃபிலிம் ஃபேக்டரி’ சார்பில் தயாரித்து, ஹரி மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், ‘யெல்லோ’. இதில் பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்

சிறுவயதிலிருந்தே நட்பாக இருக்கும் (பூர்ணிமா ரவி) ஆதிரையும், அவரது காதலர் (சாய் பிரசன்னா) சந்தோஷூம் காதலர்கள். இருவரும் தங்களது லட்சியக்கனவை நோக்கி நகர்கின்றனர். இந்நிலையில் ஆதிரையின் (டெல்லி கணேஷ்) அப்பாவிற்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பு முழுவதும் ஆதிரை ஏற்கிறார். அதோடு அவரது காதலும் முறிந்து போகிறது. மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கும் அவர் நான்கு நபர்களைத்தேடி செல்கிறார். அவர்களை சந்திதாரா, இல்லையா? காதல் என்ன ஆனது? என்பது தான், யெல்லோ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

இத்திரைப்படத்தை பார்க்கும் போது ஒரு ஜாலியான ரோட் ட்ரிப் சென்றதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. மனம் அழுத்தமான தருணங்களில் இந்த மாதிரியான பயணம் நம்முடைய வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நிகழுவுகளை அருமையாக கடக்க உதவுகிறது. வெவ்வேறு தருணங்களில் சந்திக்கும் மனிதர்களிக்கிடையே கிடைக்கும் புதிய நட்பும், தொடர்பும் பலமிக்கவர்களாக உணர்ச்செய்யும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர், ஹரி மகாதேவன். தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய வசனங்கள் பாராட்டும் படி இருக்கின்றன.

ஆதிரை (பூர்ணிமா ரவி) ஒரு எமோஷலான கேரக்டர். அதற்கு நேரெதிரான ஜாலியான கேரக்டர் சாய் (வைபவ் முருகேசன்), இவர்கள் ஒன்றாக பயணிக்கும் காட்சிகள் எல்லாமே ரசனையாக இருக்கின்றன. லீலா சாம்சன் தனது காதல் அனுபவங்களை கூறும் காட்சிகளும் ரசனை.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதை. என்பதால், அதை நன்கு புரிந்து கொண்டு, மொத்த திரைப்படத்தையும் சுமந்துவ் சிறப்பாக நடித்திருக்கிறார், ஆதிரையாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி. வைபவ் முருகேசனும் அதற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். இருவருமே எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். இருவருமே நல்ல நடிகர்கள். என்பதை, இந்தப்படத்தின் மூலமாக உறுதி படுத்தியிருக்கிறார்கள்.

பூர்ணிமா ரவியின் அப்பாவாக டெல்லி கணேஷ். கை தேர்ந்த நடிப்பு! பிரபு சாலமன் ஒரு காட்சியில் நடித்துள்ளார். மற்ற நடிகர்களான லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஸ்வர், லோகி, அஜய் ஆகியோர் திரைக்கதை நகர்வுக்கு பயண்பட்டிருக்கிறார்கள்.

கிளிஃபி கிரிஸ், இசையமைப்பில், பாடல்கள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, ஷக்திஶ்ரீ கோபாலன் பாடிய, ராஜேஷ் ஶ்ரீதர் எழுதிய ‘மேகங்கள்’ பாடல் இனிமையாக இருக்கிறது. ஆனந்த் காசிநாத், பின்னணி இசை இதமாக இருக்கிறது. ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

யெல்லோ – வசீகரம்!