மொழி, இனம், மரபு, கலாச்சார எல்லைகள் கடந்து வாழும் மக்களுக்கான மகிழ்ச்சி தரும் ஆகப் பெரும் கலை சினிமா. இதில் தனித்துவமான மற்றும் காலத்தை வெல்லும் படைப்புகளால் உலக அரங்கில் தொடர்ந்து பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்க்கும் சிறப்பைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா.
சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” திரைப்படம் உலகளாவிய சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த “ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பிக் ஸ்க்ரீன்’ போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்காக இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பினால் பார்வையாளர்களின் உள்ளங்களை வென்றதை அரங்கம் அதிரும் கைதட்டல்களின் வழி உணர முடிந்தது. மேலும் கவிதை போல அழகாகவும், பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பும் கொண்ட இத்திரைப்படம் ஒரு தலை சிறந்த படைப்பு எனவும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக இப்படம் அமைந்துள்ளதாகவும் பலரும் பாராட்டினர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ராம் , நடிகர்கள் என ஒட்டுமொத்தத் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் தந்த தருணமாக சர்வதேசத் திரையிடல் நிகழ்ச்சி அமைந்தது.
“ஏழு கடல் ஏழு மலை” திரைப்படம் உலக அரங்கில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றதோடு தொடர்ந்து ரசிகர்களின் கவனைத்தைத் தன் பக்கம் ஈர்த்தபடி இருக்கும் இந்நேரத்தில், தரமான கதைகளைச் சொல்லும் திரைப்படங்களைத் தயாரித்து உலக அரங்கில் தமிழ்சினிமாவின் தனித்துவத்தை உணர்த்தும் அனுபவங்களைத் தொடர்ந்து வழங்குவதற்கும் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் உறுதியுடன் செயல்படத் தயாராக உள்ளது.