‘எம்.ஆர்.மோஷன் பிக்சர்ஸ் ‘நிறுவனத்தின் சார்பில், மகேஷ் செல்வராஜ் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார், எஸ்.சாம். இதில் தேவ், தேவிகா சதீஷ், ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே விக்கி, யுவராஜ் கணேசன், நிதி பிரதீப், பிரவின், கிரி துவாரகீஷ், கலைக்குமார், சுபாஷினி கண்ணன், சுவாதி நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘படவா’ கோபியின் ஒரே மகளான நாயகி தேவிகா, அப்பாவின் விருப்பப்படி வாழ்ந்து வருபவர். அதோடு அப்பாவின் எந்த பேச்சையும் கேட்க தவற மாட்டார். இந்நிலையில், விஜே நிக்கி அவரை பெண்பார்க்க தனது குடும்பத்துடன் வருகிறார். தேவிகாவை பார்த்தவுடன் பெண் பார்க்க வந்தவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். காரணம், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்த விஷயம் தெரிந்த பெண்ணின் அப்பாவான ‘படவா’ கோபியும் கடும் அதிர்ச்சியடைகிறார். தேவிகாவிற்கோ அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக ஞாபகமேயில்லை. எனவே, தன்னை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளையான தேவ்விடம் இது குறித்து கூற, அவரும் அதிர்ச்சியடைகிறார். இருவரும், தங்களுக்குத் தெரியாமல் திருமணம் எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்கின்றனர். அதன் பின்னர் என்ன நடந்தது? என்பதுதான் ‘யோலோ’.
இளம் நாயகன், நாயகியாக தேவ் மற்றும் தேவிகா இருவரும் கதைக்கேற்றபடி தோற்றமளிக்கின்றனர். படம் முழுவதும் நன்றாக நடித்துள்ளனர். தேவ், தேவிகாவை கண்டவுடன் அவரை சுற்றிவருவதும், அவர் மீது காதல் கொள்வதும் ரசனையாக இருக்கிறது. இவர்கள் நடிப்பிலும் பெரிதாக குறை வைக்கவில்லை! இளமை ததும்பும் தேவிகாவும், துடிப்புடன் நடித்து ஆடிப்பாடியிருக்கும் தேவ்’ க்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
விஜே நிக்கி சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். பல காட்சிகளில் கிட்டத்தட்ட க்ளைமாகஸ் வரை கடுப்பேற்றுகிறார். இயக்குநர் எஸ் .சாம் க்ரைம், காதல், அமானுஷ்யம் இவையனைத்தையும் கலந்து சொல்லியிருக்கிறார். அதை இன்னும் சுவைபட ரசிக்கும் வண்ணம் சொல்லியிருக்கலாம். சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், சகீஷனா சேவியரின் இசையும் படத்தின் பலமாக இருக்கிறது. இளைஞர்கள் கொண்டாடும் வகையில் படமாக்கப்பட்டிருப்பதும் படத்தின் இன்னொரு பலம்.
யோலோ – இளைஞர்களுக்கானது.