MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ஆர். கே. செல்வமணி..,
இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல் தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்ப விழா என்று. ஹீரோ தேவ் எனக்குச் சின்ன வயதிலிருந்து தெரியும். அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்திற்காக தேவ் என மாறியுள்ளார்.அவரது மாமா டெல்லி பாபு, உலகத்தின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். அவருக்குத் தீமையே தெரியாது, நன்மை தான் செய்வார். மிகச் சிறந்த இயக்குநர்களை, மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கிய தயாரிப்பாளர். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. அவர் தன் மகனை ஹீரோவாக்க வேண்டுமென்று பல முறை சொல்லியுள்ளார். இன்று அந்த ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி. அவருடைய ஆசி உனக்கு எப்போதும் உண்டு.
“YOLO” என்றால் என்னவென்று தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் கேட்டேன் — You Only Live Once என்றார்கள். உண்மை தான், நாம் ஒரு முறை தான் வாழ்கிறோம், அதை அழகாக வாழ்வோம்.
இந்த படத்தில் எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். சகிஷ்னா வரும்போதே 6 பாடலுடன் வந்துள்ளார். சாம், சமுத்திரகனி, அமீர் மாதிரி இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறார், அதுவே அவர் திறமையைச் சொல்லும்.
எனக்கு முதல் படத்துக்குச் சம்பளம் ₹14,000 தான். ஆனால் அடுத்த படத்துக்குச் சம்பளம் ஒரு கோடி ரூபாய். அதனால் முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள். முதல் படத்தோட பட்ஜெட் என்னவோ அது தான் உங்கள் சம்பளம். ஏனெனில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் 1 கோடி போடுகிறார் என்றால் அது தான் என் சம்பளம். அப்படி இயக்குநர்கள் நீங்கள் நினைத்தால்தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க முடியும். இப்படத்திற்கு உழைத்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்.
இயக்குநர் அமீர் பேசியதாவது..,
இந்த விழாவில் கலந்து கொண்ட எங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் பெருந்தன்மையோடு காரணமில்லாமல் கலந்து கொண்ட அண்ணன் ஆர். கே. செல்வமணி அவர்களுக்கு நன்றி.
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு “கேப்டன்” எனும் பெயர் நிரந்தரமாக அமையக் காரணமானவர். அவருடைய மறைவுக்கு பின்னாடியும் ஓடிய கேப்டன் பிரபாகரன் படத்தை தந்தவர். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் திரையிடப்பட்டு ஒரு மாபெரும் வெற்றி அடைகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தின் தரம்.
என்னுடைய முதல் படம் மௌனம் பேசியது முதல் இப்போ வரைக்கும் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் என்கிட்ட இருந்து வெளியில் போயிருக்கிறார்கள். அதில் பாதி பேரின் பெயரே எனக்கு தெரியாது. “சார், உங்களோடு தான் ஒர்க் பண்ணேன்” என சொன்னால் “அப்படியா, சரி ஓகே” அப்படின்னு சொல்வேன். ஏன்னா ஒரே ஒரு ஷெட்யூலில் மட்டும் தான் ஒர்க் பண்ணியிருப்பான். அடுத்த ஷெட்யூலில் இருக்க மாட்டான். அப்படிப்பட்டவர்கள் ஒரு 30–40 பேர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு தான். அதில் சாம் ஒருவர்.
எல்லாரும் கனி பற்றி தான் சொன்னார்கள். அவன் இளகிய மனசுக்காரன். பருத்திவீரன் படப்பிடிப்பில் யாரையும் திட்டக்கூட மாட்டான். இப்போது அவனை நடிகனாகப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. அவனுடைய வளர்ச்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தின் ஹீரோ பற்றி எனக்கு பெருசா ஒன்றும் தெரியாது. பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள்: “ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும்?” என்று. அவருடைய மாமா நிறைய புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். மரகத நாணயம் எடுத்த சரவணன், பேச்சலர் எடுத்த சதீஷ் — இவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தியதால் தான் இன்று மகேஷ் என்ற தயாரிப்பாளர் மூலமாக தேவ் ஹீரோவாகி இருக்கிறார்.
தேவ் தன் அப்பா அம்மா இந்த மேடையில் இல்லை, அவர்கள் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்னு சொன்னார். வாழ்க்கை அப்படி நம்ம நினைப்பது போல நடக்காது. அப்படி நினைத்த மாதிரி நடந்ததுன்னா அது வாழ்க்கையே இல்லை. பொதுவாக சொல்வார்கள் — நீ போகும் பாதையில் இடையூறு இல்லையென்றால் அது உனக்கான பாதை இல்லை. நீ போட்ட பாதையில் இடையூறு இருந்தால் அதைச் சரி பண்ணினால்தான் அது உன் பாதையாக இருக்கும்.
நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நம்புகிறேன். சாம் என்கிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான், கனிகிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான். ஆனா இருவரின் பாணியையும் பின்பற்றாமல் புதுசாக படம் எடுத்திருக்கான். ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்துள்ளான். டிரெய்லரில் அது தெரிகிறது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பேசினார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன். நன்றி.
இயக்குநர் சாம் பேசியதாவது..,
முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்களால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது. அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக் கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது.
நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் எனக்கு இப்போதுவரை நிறைய உதவி செய்திருக்கிறார்கள்.
கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்க மாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். “எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்பார். அவர் இந்தப் படத்திற்குப் பெரிய ஆதரவாக இருந்தார்.
எங்கள் அழைப்பை மதித்து வந்த ஆர். கே. செல்வமணி சாருக்கு நன்றி. எனக்கு இப்பட வாய்ப்பை தந்த மகேஷ் சாருக்கு நன்றி. அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தார். அதுபோலவே தேவை லீடாக அறிமுகப்படுத்தினார்.
ஆகாஷ் ஒரு அப்பாவி பையனாக நன்றாக நடித்துள்ளார். பலரைத் தேடி கடைசியாக தேவிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
என் நண்பன் ராம் — கல்லூரியிலிருந்தே ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். இன்ஸ்டிடியூட்டில் சூரஜ் உடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் கேட்டதைச் சிறப்பாகச் செய்து தந்துள்ளார்.சகிஷ்னா இந்தப் படத்தில் 6 வெவ்வேறு பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.எடிட்டர் ரமேஷ் நேரடியாக வந்து எனக்கு உதவினார். தயாரிப்பில் நாகராஜ் புரொடக்ஷன் மேனேஜர் பெரிய ஆதரவாக இருந்தார்.என் உதவி இயக்குநர்கள் குழு என்னைவிட வேகமாக இருப்பார்கள். ரகு மாஸ்டர், டேஞ்சர் மணி மாஸ்டர் இருவருக்கும் நன்றி.பாடலாசிரியர்கள் சூப்பர் சுப்பு, முத்தமிழ், சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் — இவர்களின் வரிகள் படத்துக்கு வலு சேர்த்துள்ளன.
படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படவா கோபி பெரிய ஆதரவாக இருந்தார். நன்றி. இது இளமையான எண்டர்டெயின்மென்ட் படம். நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும். “YOLO” செப்டம்பர் 12 அன்று திரைக்கு வருகிறது.மீடியா நண்பர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். நன்றி.