‘கூச முனிசாமி வீரப்பன்’  சீரிஸின் வெளியீடு டிசம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றம்!

ZEE5, இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’  சீரிஸின் வெளியீட்டு தேதியை மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக டிசம்பர் 8ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத வெள்ள பாதிப்பு காரணங்களால் இதன் பிரீமியர் தேதி டிசம்பர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சமீபத்திய சென்னை வெள்ளம் பரவலான மின்வெட்டுக்கு வழிவகுத்தது, நகரின் உள்கட்டமைப்பை கணிசமாக பாதித்தது. இதன் விளைவாக, பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கு உகந்த வகையிலான பார்வை அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  ‘கூச முனிசாமி வீரப்பன்’ தற்போது டிசம்பர் 14 ஆம் தேதி ZEE5 இல் பிரத்தியேகமாக திரையிடப்படவுள்ளது.

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை  வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில்,  அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது.