அருண் விஜய், கார்த்திக் நரேன் கூட்டணியில் மாஃபியா!

தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும், எல்லைக்கு அப்பாற்பட்டவர்களுக்கும் இது ஒரு அற்புதமான தருணம். மிக திறமையான இரண்டு ஆளுமைகள் இணைவதை பற்றிய செய்தி தான் இது. ஆம், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க “மாஃபியா” படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தூண்டியுள்ளது. அருண் விஜய் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோருக்கு இடையில் மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அது விடாமுயற்சி, தூண்டுதல் மற்றும் துல்லியத்தன்மை பற்றியது. குறிப்பாக, லைகா புரொடக்ஷன்ஸ் போன்ற ஒரு மிகச்சிறந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு துணையாக இருப்பது ஒரு அற்புதமான அம்சம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு எளிய சம்பிரதாய விழாவுடன் தொடங்கியது.

எல்லாவற்றிற்கும் மேலாக, “மாஃபியா” படத்தின் மொத்த படப்பிடிப்பு நாட்கள் குறித்த கவர்ச்சிகரமான செய்தி ஒன்றும் இருக்கிறது. இது குறித்து கார்த்திக் நரேன் கூறும்போது, “ஆம், நாங்கள் இன்று படப்பிடிப்பை தொடங்கி, அதை 37 நாட்கள் கால அட்டவணையில் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஸ்கிரிப்டை முடித்தவுடனேயே, அருண் விஜய் சார் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று என்னால் உணர முடிந்தது, குறிப்பாக “தடம்” பார்த்த பிறகு. எனினும், அவர் என் கதையை கேட்டு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எனக்குள் இருந்தது, ஏனெனில் பல்வேறு கட்டங்களில் இருக்கும் பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாக, எந்தவொரு பரிந்துரைகளையும் மாற்றங்களையும் கூட கொடுக்காமல் அவர் உடனடியாக ஒரு ஒப்புதல் கொடுத்தார். அது போலவே லைகா புரொடக்ஷன்ஸ், பல பெரிய படங்களை தயாரித்து வந்தாலும், எந்தவிதமான தலையீடும், கேள்விகளும் இன்றி எனக்கு முழு சுதந்திரம் அளித்தனர். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு நம்பிக்கைக்குரிய திரைப்படத்தை வழங்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்” என்றார்.

அருண் விஜய் தான் தன் மனதில் உடனடியாக தோன்றிய கலைஞர் என்று அவர் கூறியதால், தலைப்புக்கு ஏற்றவாறு அவர் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்கிறாரா? என கேட்டதற்கு, “அவர் கேங்க்ஸ்டராக நடிக்கவில்லை, வடசென்னை பகுதியிலும் படத்தின் கதை இருக்கப் போவதில்லை. மாஃபியா வேறுபட்ட ஒரு களத்தை கொண்டிருக்கும் என்பதை மட்டும் தான் என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும்” என்றார்.

மற்ற நடிகர்கள் பற்றி அவர் கூறும்போது, “பிரசன்னா மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பிரியா பவானி சங்கரும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்திலும், தோற்றத்திலும் நடிக்கிறார்” என்றார்.

 ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.