தமிழ் சினிமாவின் வழக்கமான கரடு, முரடான வில்லன்கள் மத்தியில் ஹீரோவுக்கான தகுதியுடன் வில்லானக நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயருடன் விளங்கி வருபவர், நடிகர் அர்ஜுன்தாஸ். கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் மூலம் பிரபலமாகி மாஸ்டர், விக்ரம், அநீதி, குட் பேட் அக்லி உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடித்து வெளியாகும் கான்சிட்டி திரைப்படம் குறித்தும், நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து வருவதாக வந்த செய்திகள் குறித்தும் அர்ஜுன் தாஸ் கூறியதாவது..,
‘’கான்சிட்டி, குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்.
கான்சிட்டி படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான, நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது. கடன்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கைச் சவால்கள் என பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கான் சிட்டி படத்தில் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களுடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம், காட்சிகளுக்கான தயாரிப்பு ஆகியவை எனக்கு புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. அதுவே ஒரு நடிகராக என்னை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்கிறது. இந்தப்படம், குடும்பத்துடன் பார்த்து ரசிக்க ஏற்றவகையில் உங்களை மகிழச்செய்யும்.
இன்னொரு முக்கியமான விஷயம். சமீபத்தில் சமூக வலைதளங்களில் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் செய்திகள் பரவியது. அது குறித்து எனது வீட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். உண்மையில் நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும் நடக்கவில்லை. அந்த செய்தி எங்கிருந்து எப்படி பரவியதோ தெரியவில்லை. நல்ல செய்தி தான் என்பதால் நானும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனது திருமணம் பற்றிய செய்திகளை நிச்சயமாக உங்களுடன் பகிர்வேன்.
‘பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது.