ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த சிலம்பரசனின் ‘மாநாடு’ போஸ்டர்!

சுரேஷ் காமாட்சியின் ‘வி’ ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு காட்சிகளை படமாகும் வேகமும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுக்கும் சிலம்பரசனின் ஒத்துழைப்பும் படக்குழுவினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

குறிப்பாக புதிய சிலம்பரசனை இந்தப்படப்பிடிப்பில் பார்க்க முடிவதாக படக்குழுவினர் சிலாகிக்கின்றனர். இதேவேகத்தில் சென்றால், ஏற்கனவே திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிவடைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது,

இந்தநிலையில், தற்போது ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்துல் காலிக் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிலம்பரசனின் தோற்றமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.