பாலாவின் உதவியாளர் இயக்கியுள்ள ‘ஓகே கூகுள்’

வள்ளுவன்,  பிரபல  எடிட்டர்  லெனினிடம்  உதவியாளராக  இருந்து  எடிட்டிங் தொழில்நுட்பத்தையும்  பாலாவிடம்  உதவியாளராக  இருந்து  இயக்குநர்  பயிற்சியையும்  பெற்றவர்.

வள்ளுவனின் அண்ணன்   தியாகராஜன்  (நாடக கலைஞர் – திணை நிலவாசிகள்) ‘தமிழ் ஸ்டுடியோ’வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு ஒரு கண்காட்சி  நடத்தினார்கள். அப்போது  அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே  அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த  எடிட்டர் லெனின் இவரைப் பற்றி  விசாரிக்கவும்  மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு  அவரது  உதவியாளராகியிருக்கிறார்.

பின்னர் எடிட்டர்  கிஷோர்,  ஜி. சசிகுமார் , எல்.வி. கே. தாஸ் ஆகியோருடன் எடிட்டிங் துறை சார்ந்த நட்பான அனுபவங்கள்.  அவர்கள் மூலம் கிடைத்த நட்பில் பாலாவிடம் இணைந்திருக்கிறார் . உதவி எடிட்டராக இருந்த போது பாலாவின் படப்பிடிப்பிற்குப்  போய்  பார்த்தபோது  தான் இயக்குநரின் ஆளுமை மீது இவருக்கு காதல் வந்திருக்கிறது .

அதன்பின் இயக்குநர் கனவு தீவிரமாகி இருக்கிறது . ஒருவழியாக பாலாவிடம்  உதவி  இயக்குநராகவும் சேர்ந்து விட்டார். பாலாவிடம்  இயக்கம்  பற்றிய  அனுபவங்களைக்  கற்றார். படித்துவிட்டு கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்தவர்  இப்படி மெல்ல  மெல்ல  நகர்ந்து  சினிமாவில்  இயக்குநராகி  இருக்கிறார்.

தனது  இயக்குநர்  கனவை  நோக்கிச்  செல்லும்  முதல்படியாக  ‘ஓகே கூகுள் ‘ என்கிற  ஒரு  ஏழு  நிமிடக்குறும்படத்தை  இயக்கியிருக்கிறார் .

இது  ஒரு  அடல்ட் காமெடி படமாகும். படத்தில்  நாயகனுக்கு  கள்ளச்சந்தையில்  ஒரு  மர்மமான  மொபைல்  போன் கிடைக்கிறது.  அதிலுள்ள  அப்ளிகேஷன்கள்  செயல்பட  ஆரம்பிக்கும்போது அவனது  வாழ்க்கையே  திசை  மாறுகிறது . முடிவு  என்ன  என்பதுதான்  கதை.

இதில் பேராசிரியரும் அறிவழகன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.  சன் டிவி தொடர்களில்  வில்லியாக  நடிக்கும்  காயத்ரி  கிருஷ்ணன்  கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  இந்த 7 நிமிடக் குறும்படம் ஒரே  நாளில் படமானது . ஆனால் இதற்காக  எடிட்டிங்  செய்ய ஏழு நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாலாவின் சீடர் ஆயிற்றே.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு வினோத், இசை- கோகுல் கிருஷ்ணன் ,எடிட்டிங் -அமர்நாத். தயாரிப்பு  எஸ். மலர்விழி, ஜி. பூரணி, ஜி.கே. ரம்யா, சி.வி .பச்சையா பிள்ளை, ஐ. கார்த்திக்.

தனது திரைப்பட உருவாக்கம் திறமைக்கு ஒரு மாதிரிக்காக இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் .  மூன்று திரைக் கதைகள் தயாராக வைத்திருக்கிறார். நல் வாய்ப்புக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறார். பாலாவின் மாணவர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார் என்று நம்பலாம்..