புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு அரசு வேலை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்தார். அவர் புயலால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாயும் அரசு வேலையும் வழங்க வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

நேற்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மையின் #CycloneGaja முன்னேற்பாடு நடவடிக்கைகளை பாராட்டியிருந்தேன்! ஆனால், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தால் மீட்புப் பணிகள் படுமோசமாக இருக்கிறது. குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை! இதனை பார்வையிட தமிழக முதலமைச்சருக்கு தயக்கம் ஏன்? என்பது தெரியவில்லை.

மழை வரும் காலத்திற்கு முன்பே முறையாக கால்வாய்களை, ஏரிகளை, ஆறுகளை தூர் எடுக்கின்ற பணியை அரசு முறையாக நடத்திடவில்லை என்பதை இந்தப் புயல் பாதிப்பு தெளிவாக காட்டுகிறது. பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இந்தப் புயலின் காரணத்தால் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உடனடியாக மின்தடை ஏற்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளில் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.

புயலால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அது போதுமானதாக நிச்சயமாக இருந்திட முடியாது, குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் அவர்களுக்கு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசினுடைய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவேண்டுமென வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.