‘மக்களை அரசியல், சட்ட விழிப்புணர்வு அடையச் செய்வதே நோக்கம்’ – இயக்குநர் பா.இரஞ்சித்

கலைத்துறையில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய “நீலம் பண்பாட்டு மையம்” இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சட்ட ஆலோசனை மையம், இரவு பாடசாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் “டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி” என்ற இரவு பாடசாலையினை தொடங்கி வைத்திருக்கிறார். “இந்த இரவு பாட சாலையின் மூலம், அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அறிவார்ந்தவர்களாக நெறிப்படுத்துவதே நோக்கம். இதைப்போலவே தமிழகம் முழுக்க இருக்கிற கிராமங்களிலும் இதனை செயல்படுத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க ஒத்துழைத்த ஜெய்பீம் பேரவை மற்றும் டாக்ர் பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ஆகியோருக்கு நன்றிகள்” என்றார் இயக்குநர் பா.இரஞ்சித்.

அவரின் இந்த செயல்பாட்டிற்கு அந்தப் பகுதி மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.