நெடுநல்வாடை

தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு இது நீண்ட நெடிய வாடை.போரில் வெற்றி பெற்றவனுக்கோ நல்வாடை. இந்தக் கதையில் தலைவிக்கு ஒரு வகையில் வெற்றி. தலைவனுக்கு தோல்வி.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக வைத்து நக்கீரர் பாடியதுதான் நெடுநல்வாடை. அந்த இலக்கியப் பெயரில் வந்திருக்கிற படம்.

பூ ராமு,இளங்கோ ,அஞ்சலி நாயர், பாடல்கள் வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன்
எளிய கிராமம். வெல்லம் காய்ச்சும் கரும்பு விவசாயி பூ ராமு. ஆசைக்கொரு மகள் ,ஆஸ்திக்கொரு மகன் என அளவான குடும்பம்.

ஓடிப்போன மகள் கணவனால் கைவிடப்பட அப்பன் வீட்டுக்கு இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலம் அடைகிறாள். அங்கு என்னென்ன நடக்கிறது என்பதை நெல்லையின் மண் வளம்,மன வலம் குறையாமல் ஆபாசமில்லாமல் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன்.

எத்தனையோ படங்கள் நெல்லையின் ஸ்லாங் என சொல்லி வந்திருக்கின்றன. ‘என்னவே,என்னலே’என்பதே வட்டார வழக்கு என இழுவையாக அறியப்பட்ட ஏனைய மாவட்ட மக்களுக்கு இதுவே அசல் மணம் என காட்டியிருக்கிறார்கள்.

பொன் வைக்கிற இடத்தில் பூ வைத்தால் போதும் என ராமுவை செல்லையாவாக நடிக்கச்சொன்னால் அந்த மனிதர் வாழ்ந்தே காட்டிவிட்டார். எளிமை இயல்பு, வெற்றுடம்பு ,வேட்டியில் இழைகிறது. மகள் வழிப் பிள்ளைகள் என்கிற மனப்பான்மை இல்லாமல் அவர்களையும் காக்க வேண்டும் என்கிற தாய்மை உள்ளத்துடன் தந்தையின் கடமை ஆற்றுகிற தாயுமானவன் கேரக்டர்.

பேரனுக்கு பெண் தரமுடியாது மறுக்கப்பட்டதைக் கூட சகித்திக் கொள்ளும் அவரால் “என்னய்யா வேலை பார்க்கிறான்?”என பெண்ணின் அண்ணன் கேட்டதும் உடைவது நெகிழ்ச்சி.!
அமுதாவாக வருகிற அஞ்சலி நாயரின் கஞ்சா கண்கள் ஆழ் மனது வரை ஊடுருவுகிறது. “பெண்ணுக்கு ஒருவனைப் பிடித்து விட்டால் கடைசி வரை அவனைத்தான் நினைத்துக் கொண்டிருப்பாள்.நெஞ்சில் ஒருவனையும் ,நிஜத்தில் இன்னொருவனையும் அவளால் சுமக்க முடியாதுய்யா “என காதலனிடம் சொல்லும் அவளால் அப்படி வாழ முடிந்ததா?

இளங்கோவாக இளங்கோ. வேறு யாராவது நடித்திருந்தால் அந்த நடிகரின் முகம்தான் முன்னே துருத்திக்கொண்டு இருந்திருக்கும். அளவுக்கு அதிகமாக கூவாமல் அடக்கமுடன் நடித்திருப்பதால் இயல்புடன் இருக்கிறது. தாத்தா,அம்மாவை விட காதலுக்கு முக்கியம் கொடுத்ததை குற்றமாக உணரும் காட்சி சிறப்பாக இருக்கிறது.
ஜோஸ் ஃபிராங்க்ளின் இசை.கருவா தேவா,ஏதோ ஆகிப் போச்சு இரு பாடல்களும் அவ்வப்போது பிஜிஎம்.மாகவும் மாறுகிறது. வைரமுத்து வரிகள் கோகினூர் ரகம். “பிரிவு இல்லாத காதல்,அது சுவர்கள் இல்லாத வீடு,இந்த உறவும் வாழ்க,பிரிவும் வாழ்க,வலிகள் வாழ்க.” பச்சை மரத்தில் எழுத்தாணி வரிகள் !

வினோத் ரங்கசாமியின் ஒளிப்பதிவும் காசி விஸ்வனாதனின் எடிட்டிங்கும் சிறப்புப் பதிவுகள். தஞ்சைக்கு நிகரான இயற்கை அழகு நெல்லை மாவட்டத்திலும் கொட்டிக்கிடக்கிறது.
அழகான படம்.குற்றங்கள் இருந்தாலும் உறுத்தவில்லை.
பார்க்கலாம்.