‘பொது நலன் கருதி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஸ்கின் ஆவேசம்!

தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’.
5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன். பிப்ரவரி 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் மே 19 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, இயக்குனர் மிஸ்கின், வசந்த பாலன், மீரா கதிரவன், கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வசந்த பாலன் பேசும் போது…
சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான் என உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசினார்.

மிஸ்கின் பேசியதாவது…,

விஷால் உண்மையாகவே இரவு பகல் பார்க்கலாம் தமிழ் ராக்கர்ஸ் எனும் கயவர்களை ஒழிக்க போராடி கொண்டு தான் வருகிறார். அதை நானே என் கண் கூடாக பார்த்துள்ளேன். இன்று வரை விஷால் அந்த திருடர்களை பிடிக்க முயற்சி செய்து தான் வருகிறார். ஆனால் அவர்களை பிடிப்பது என்பது கடினமான விஷயம். மரம், செடி, கொடி, பறவைகள் எப்படி இருக்கிறதோ அதே போல் தான் திருடர்கள் இருப்பதும் இயற்கை. வசந்த பாலனின் ஜெயில் திரைப்படம் வரும். அதையும் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட தான் செய்வார்கள். அது நல்ல படமாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என கூறினார். நல்ல படம் எடுப்பவர்களுக்கு ஒரு டீ, இரண்டு பிஸ்கட் போதும். நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்ற இயக்குனர்களுக்கு அது போதும் என பேசினார்.

இப்படத்தின் இயக்குனர் சீயோன் பேசியதாவது….

கந்து வட்டி பிரச்சனை குறித்த உண்மை சம்பவங்களை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். மக்கள் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும். படத்திற்க்கு நடித்துள்ள கருணாகரனை நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தோம் ஆனால் அவர் ப்ரோமோஷனுக்கு எல்லாம் வர மாட்டார் போல் என பேசினார். டப்பிங் பேசுவதற்கு முன்பாகவே சம்பளம் மொத்தத்தையும் கொடுக்க சொன்னார். நாங்களும் கொடுத்து விட்டோம் ஆனாலும் நிகழ்ச்சிக்கு வரவில்லை என பேசினார். இதெல்லாம் இப்படி தான் இருக்கு, ட்விட்டரில் பேசிட்டு இருந்தால் போதுமா? இதையெல்லாம் யார் கேட்பது? என கருணாகரனை விளாசி இருந்தார்.

இந்த படத்தில் சந்தோஷ், அருண் ஆதித் ஆகியோர் எல்லாம் பொது நலத்திற்காக தற்போது வரை சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார். பிப்ரவரி 7-ம் தேதி இந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறோம். ஆதரவு கொடுங்கள் அப்போது தான் பொது நலத்தை கருதி உருவாகும் படங்கள் வெளியாகும் என பேசினார்.

தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பேசியதாவது,

பொது நலன் கருதி நல்ல கருத்துள்ள படம். நான் இந்த படத்தை கூட பார்த்து விட்டேன். மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டிய படம். இந்த நிகழ்ச்சிக்கு மிஸ்கின் அவர்களை வருவாரா? வரமாட்டாரா? என நினைத்து கொண்டு தான் அழைத்தேன். புது முக இயக்குனராக இருந்தால் என்ன வருகிறேன் என கூறி விட்டார். அவரை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் என கூறினார். தாழ்ந்து கிடப்பவர்களுக்கும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் தான் நாம் எப்போதும் உதவியாக இருக்க வேண்டும். பெரிய பணக்காரர்கள், கோடீஸ்வரர்களை போல ஒட்டுண்ணி வாழ்கை வாழும் வாழ்க்கை வாழ்க்கையே கிடையாது. அந்த மாதிரி உதவும் இனத்தில் பிறந்த மிஸ்கின் அவர்களை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என பேசினார்.

அதே போல் தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து வருகிறார் வசந்த பாலன். சமூகத்தில் நடக்கும் அவலங்களை புரட்டி போடும் படமாக எடுத்து வரும் ஒரு அருமையான இயக்குனர். அவரை நான் போனில் தான் தொடர்பு கொண்டு அழைத்தேன். உடனே வருகிறேன் என கூறி விட்டார். மேலும் திருமுருகன் காந்தி போன்ற நல்லவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நேற்று அவரது வீட்டிற்கு சென்றேன். கண்ணீர் வந்து விட்டது. அப்படியான நிலையில் இருந்தும் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் போராடி வருகிறார். எவ்வளவு கட்சிகள் தேர்தலில் நின்றாலும் ஒரு நல்லவன் இருந்தால் மக்கள் அவரை தேர்வு செய்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லாம் நமக்காக போராடுகிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்கான அல்ல. இவருக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். கொள்ளையடிப்பவர்கள் பக்கம் தான் நீதி துறை என அனைத்தும் உள்ளன. அப்படியானவர்களுக்கு தான் நாமும் துணை நிற்கிறோம். ஒரு முறையாவது திருமுருகன் காந்தி போன்ற சமூகத்தை நேசிப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பேசினார்.

திருமுருகன் காந்தி பேசியதாவது…,

ஒருவர் 1 கோடிக்கான தொழில் தொடங்குகிறார் என்றால் அவர் வாரியாக 18 லட்சம் செலுத்த வேண்டும். இப்படியான நிலையில் முதலீடு போட்டவர்களுக்கு எப்போது அந்த 1 கோடி வரும்? வெறும் கார்ப்பரேட் முதலைகள் மட்டுமே தொழில் செய்ய வேண்டும் என்ற சூழலை தான் அரசாங்கம் உருவாக்க முயல்கிறது. இதே நிலைமை தான் திரையுலகிலும் நடக்கிறது. அதை தான் இங்கு பேசிய இயக்குனர்கள் கூறுகிறார்கள். நானும் ஒரு துறையில் வேலை செய்துள்ளேன். அந்த நிறுவனம் எனக்கு 5 லட்சம் தர வேண்டும். ஆனவர் அவர்கள் தரவில்லை. அந்த நிறுவனத்திற்கான வரியை நான் செலுத்த வேண்டும். இதற்காக நான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தேன். 10 வருடங்களாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இது தான் இந்த அரசாங்கத்தின் யோக்கியதை என கொந்தளிப்புடன் பேசினார். மேலும் கஜா புயலால் பாதிக்க மக்களுக்காக பி.டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நினைத்தது புதிய சிந்தனை. இதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். சினிமாவில் இப்படியொரு சமூக சிந்தனையுள்ளவரை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தண்ணீர், பிஸ்கட் என கொடுத்து விட்டு போகும் நபர்களுக்கு மத்தியில் சத்தமில்லாமல் இப்படியான ஒரு செயலை செய்திருப்பவரை பாராட்ட வேண்டியது நம்முடைய கடமை என பேசினார்.