புதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான ‘கண்ணை நம்பாதே’ பிப்ரவரி 4ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமான இந்த படத்தை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தை தயாரிக்கிறார்.
இயக்குனர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தனது முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்திலேயே தனது திறமைகளை காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்த படத்தில் தற்போது கிரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். “என் முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன். இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர்கள் படத்தை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அது தான் “கண்ணை நம்பாதே” படத்தை எழுத என்னை உந்தியது. உதயநிதி ஸ்டாலின் சார் ஸ்கிரிப்ட்டை கேட்டு விட்டு உடனடியாக படத்தை ஒப்புக் கொண்டார். நிச்சயமாக, அவர் இப்போது மிகப்பெரிய உயரத்தில் உள்ள ஒரு நடிகர், அவரிடம் தனித்துவமான கதைகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என எனக்கு மிகவும் கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. புது ஐடியாக்களை திறந்த மனதுடன் வரவேற்று என் கதையை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமாருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.
முதல் படத்துக்கும், ‘கண்ணை நம்பாதே’ படத்துக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கூறுகள் என்பது வேண்டுமானால் பொதுவான விஷயமாக இருக்கலாம். ஆனால் கிரைம் விஷயங்கள் கலந்த இந்த களம் புதியது, வித்தியாசமானது.
அவரது படங்களின் தலைப்புகள் (இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே) கண்ணுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறதே என் கேட்டதற்கு, இயக்குனர் மு.மாறன் கூறும்போது, “தலைப்பை பொறுத்தவரை நாங்கள் நிறைய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது, இறுதியாக கண்ணை நம்பாதே முடிவு செய்தோம். நான் தலைப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசினால் அது கதையை பற்றியும் சொல்ல வேண்டி வரும்” என்றார்.
தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமார் கூறும்போது, “மு மாறன் ஸ்கிரிப்ட்டை விவரிக்க ஆரம்பித்தபோது, இறுதி அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆர்வமாக இருந்தேன். அவரது கதை சொல்லும் திறமை மிகவும் அபாரமாக இருந்தது. இது நிச்சயமாக அனைவருக்கும் சிறந்த ஒரு படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் சார் ஒப்புக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அவரது திரை வாழ்வில் இது ஒரு குறிப்பிடத்தக்க படமாக நிற்கும்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதிஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும், படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்குகிறது. சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார்