தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் கொட்டி வரும் கடும் கனமழையின் காரணமாக ஒரே நேரத்தில் கேரளாவில் உள்ள 22 அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பல பகுதிகள் தண்ணீரிம் மூழ்கியுள்ளது.
இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 37 பேர் பலியாகினர். அத்துடன் பலர் வீடு நிலங்களையும் இழந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி அறிக்கை வெளியிட்டுள்ள திமுக- ன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கேரள அரசின் நிவாரண நிதிக்கு 1.கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார். அவரது அறிக்கை பின்வருமாறு..
‘வரலாறு காணாத பெரு மழை வெள்ளத்தால் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து அவதிக்கு ஆளாகி நிற்கும் கேரள மக்களுக்கு மனமார்ந்த அனுதாபங்களையும், பேரிடரில் உயிரிழந்தோருக்கு இரங்கலையும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆறுதலையும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் அவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மழை வெள்ளம் குறித்து கேட்டறிந்தேன்.
கேரள மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரம் தாங்க முடியாதது. ஆகவே, கேரள மாநில சகோதர சகோதரிகளின் இன்னல்களை நீக்கும் மாநில அரசின் தீவிர நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி பங்கேற்றிடும் விதமாக, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் கேரள அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.