ஜீவா – ரஜிஷா விஜயனின் ‘சொக்க வச்சாளே’ பாடல்!

Jiiva and Rajisha Vijayan’s 'Sokka Vachale' from 'Thagappan' Out Now: A Soulful Melody of Love and Family!

‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் ஜீவா முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து, ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் K. குமார் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையில், மோகன் ராஜன் வரிகளில் உருவாகியுள்ள இந்த அழகான மெலடிப் பாடலை ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ எனும் முதல் பாடல் தந்தை – மகன் பாசத்தையும் ஏக்கத்தையும் பேசிய நிலையில், தற்போதைய ‘சொக்க வச்சாளே’ பாடல் புதுமணத் தம்பதிகளின் காதலையும், எந்தவித விரசமும் இன்றி குடும்பத்துடன் ரசிக்கும்படியான இல்லற நெருக்கத்தையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

கதையின் முக்கியத் திருப்புமுனையாகவும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் தொகுப்பாகவும் அமைந்துள்ள இப்பாடலில், லாரி ஓட்டுநராக இருக்கும் நாயகனுக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் இடையே மலரும் காதல் சுவாரசியமாகச் சொல்லப்பட்டுள்ளது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோயிலில் திருமணம் செய்துகொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமான சிறிய கிராமத்து வீட்டில் தொடங்கும் அவர்களின் அழகான வாழ்க்கை, கர்ப்பமடையும் மகிழ்ச்சியான தருணம் மற்றும் நாயகியின் அம்மாவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் ஏற்படும் மெல்லிய மாற்றங்கள் எனக் கதையின் நகர்வையே பாடலுக்குள் இயக்குநர் பொதிந்துள்ளார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். திங்க் மியூசிக் நிறுவனம் இசை உரிமையைப் பெற்றுள்ள நிலையில், படம் முடிவடைவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை Zee5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளது இப்படத்தின் மீதான வியாபார எதிர்பார்ப்பைக் காட்டுகிறது. வரும் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு, தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.