மறைந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடிய கடைசிப் பாடல் வெளியானது!
Late Legendary Singer Deva’s Final Recorded Song 'Vaa Siva' from 'Jail Mates' Out Now!
தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாகத் தயாராகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்திலிருந்து, மறைந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடலான ‘வா சிவா’ எனும் பாடலும், அதற்கான பிரத்யேக வீடியோவும் தற்போது வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் இயக்கி, கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில், எம். எஸ். பாஸ்கர், விஜய் வர்மா, சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கெனவே இப்படத்தின் அறிமுகக் காணொளி மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘எங்கெங்கோ தேடிப் போனேன்… ஏதேதோ நாடி போனேன்…’ எனத் தொடங்கும் முதல் பாடல் இசை ரசிகர்களைக் கடந்து ஆன்மிக அன்பர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், அறிமுகப் பாடலாசிரியர் சக்தி உமா பாலகிருஷ்ணா வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை, மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் செல்வதற்கு முன்பு மறைந்த தேவா மிகுந்த ஆன்மிக உணர்வுடன் பாடியிருப்பதே இதன் தனிச்சிறப்பாகும். சிவபெருமானிடம் பக்தன் ஒருவன் மனம் உருகிப் பாடுவதாக அமைந்துள்ள இப்பாடல் காட்சியில், தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கர் சிவனடியாராகத் தோன்றி அசத்தியுள்ளார். மேலும், ஐம்பதிற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற இப்பாடலின் பதிவின்போது, கொக்கரை, நந்தி சிருங்கி போன்ற பாரம்பரிய சிவ வாத்தியங்கள் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க, வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது.