50 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை என்பதே என் இலக்கு – நடிகர் தாமு!

டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது.

கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.

இந்த விருது பெற்ற சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளும் விதமாக ஜேகே அறக்கட்டளை அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் நடிகர் தாமு, ஜேகே கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஜேகே மற்றும் இளம் விஞ்ஞானி ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னதாக, மறைந்த நடிகர் ‘சின்னக்கலைவாணர்’ விவேக்கின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் நடிகர் தாமு பேசும்போது,

 “கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஐயாவை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. என்னுடைய மிமிக்ரி திறமையை வைத்து சுமார் மூன்று மணி நேரம் கூடியிருந்த கூட்டத்தை கலகலப்பாக்கினேன்.. இதை அறிந்த அப்துல் கலாம், அந்த மேடையிலேயே என்னிடம், “நீ கல்விப்பணிக்காக உன்னை கொடுத்து விடு” என கூறினார். உடனே சரி என கூறிவிட்டேன்..

அன்று ஆரம்பித்த பணி, இதோ பத்து வருடங்களை கடந்து, தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

அப்துல் கலாம் ஐயா வகுத்த, கல்வி குறித்த பத்து கட்டளைகளை, மாணவர்களுக்குள் உருவேற்றி, அவர்களுக்கு கற்பதில் இருக்கும் சிரமங்களையும் பயங்களையும் போக்குவதை என்னுடைய தலையாய பணியாக இப்போதுவரை செய்து வருகிறேன்.. ஒவ்வொரு மாணவனுக்கும், அவனுடயை ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒளிந்துள்ள ஆசிரியரையும் அவனுக்கு அடையாளம் காட்டுவது தான் எங்கள் பணியின் நோக்கம்.

எனது வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள், இன்று நல்ல பதவிகளில் இருப்பதாக சொல்லி என்னை சந்தித்து பேசும்போது, மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பில், மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறும்போது, அதையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக நினைத்துக்கொள்வேன்.. ஆனால் என்னுடன் இருந்தவர்கள் இதற்கான அங்கீகாரம் கிடைத்தால், இதுபோன்று இன்னும் பலர் இந்த கல்விப்பணியில் ஆர்வமாக இறங்குவார்கள் என என்னிடம் கூறுவார்கள். அந்தவகையில் தற்போது இந்த உயரிய விருது என்னது பணிக்காக கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..

என்னிடம் கல்விப்பணியை ஒப்படைத்தது போல, அதற்கு முன்பாகவே என் நண்பன் விவேக்கிடம் பசுமையை பாதுகாக்கும் பணியை ஒப்படைத்தார் அப்துல் கலாம். விவேக்கும் முழுமூச்சாக, இயற்கையை பாதுகாக்கும் பணியில் இறங்கி, ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை லட்சியமாக கொண்டு தீவிரமாக இயங்கி வந்தார். இப்போது அவர் நம்முடன் இல்லையென்றாலும், அவர் உருவாக்கிய பாதையில், தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் நடும் மரங்களின் மூலம் உயிருடன் தான் வலம் வருவதாகவே நான் நினைக்கிறேன். அதனால் அவர் துவங்கி வைத்த பணி நிற்காமல் தொடரும் என்பது உறுதி.

அவர் ஒரு கோடி மரங்கள் நடுவதை தனது லட்சிய கனவாக கொண்டதை போல, நான் ஐம்பது லட்சம் மாணவர்களுக்காகவது என்னுடைய சேவை சென்றுசேர வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளேன்” என்று கூறினார் தாமு.