யோகிபாபுவிடம் ஒட்டிக்கொண்ட ‘காங்க்’ சிம்பன்ஸி

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் கொரில்லா. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் டான் சான்டி கூறியதாவது..

‘ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்த கூட்டணி வங்கியை கொள்ளையடித்தார்களா? அல்லது போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே படத்தின் கதை.

முழு திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டு ஒரு நாள் யதேச்சையாக ஹேங் ஓவர் – 2 என்ற படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். அதில் மூன்று நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியாக இருப்பது போல் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். உடனே நம்முடைய திரைக்கதையிலும் ஒரு குரங்கை கொண்டுவரலாமே? என எண்ணி, திரைக்கதையை சற்று மாற்றியமைத்தேன்.

கொரில்லா வகை குரங்குகள் மறைந்திருந்து எதிர்பாராமல் தாக்கும் குணம் கொண்டவை. அதை தான் ‘கொரில்லா தாக்குதல் ’ என்பார்கள். அதே போன்ற ஒரு தாக்குதல் இந்த கதையிலும் இடம்பெற்றிருக்கிறது. அதனால் இந்த படத்திற்கு ‘கொரில்லா’ என்று பெயரிட்டோம். மற்றப்படி கொரில்லா வகை குரங்கு நடிக்கவில்லை. சிம்பன்ஸி வகை குரங்கு மட்டுமே நடித்து வருகிறது. சிம்பன்ஸி தொடர்பான காட்சிகளை மட்டும் தாய்லாந்திற்கு சென்று படமாக்கிவிட்டு திரும்பினோம். இந்த ‘காங்’என்ற சிம்பன்ஸி குரங்கு ஏற்கனவே ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறது. அதனால் அதனுடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஜீவாவை விட யோகி பாபுவிடம் அந்த காங் விரைவில் ஒட்டிக்கொண்டது. படத்தில் இவர்கள் தோன்றும் காட்சிகளில் சிரிப்பிற்கு உத்தரவாதம் தரலாம். என்கிறார் இயக்குனர் டான் சாண்டி.