இயக்குநர் மு. மாறன் எழுதி இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான ஆழமான பாசத்தையும் உணர்வுபூர்வமான உறவையும் மையமாகக் கொண்ட ஆக்ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மு. மாறன், “இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று திரைப்படங்களும் கிரைம் த்ரில்லர் பாணியில் அமைந்திருந்ததால், இந்த முறை மாறுபட்ட குடும்பக் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். கதையின் முதல் பாதியைக் கேட்டதுமே விஜய் ஆண்டனி நடிக்கச் சம்மதித்தார். ‘கன்டென்ட்தான் கிங்’ என்பதற்கு இப்படம் சிறந்த உதாரணமாக அமையும்” என்றார்.
கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், “அம்மாக்களின் அன்பைப் பற்றி அதிகம் பேசும் நாம், அப்பாக்களின் தியாகங்களைப் பல நேரங்களில் கவனிப்பதில்லை. இப்படத்தைப் பார்த்த பிறகு பலரும் தங்கள் தந்தைக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள். நடிகர், இசையமைப்பாளர் எனப் பல பொறுப்புகளை ஏற்றிருந்தாலும், விஜய் ஆண்டனி சக நடிகர்களுக்கு உரிய சுதந்திரம் அளித்து மிக எளிமையாகப் பணியாற்றினார்” என நெகிழ்ந்தார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இப்படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. ‘பிச்சைக்காரன்’ படப் பாடல்களைப் போலவே இப்படத்தின் அப்பா பாடலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும். தமிழ் தாய்மொழியாக இல்லாவிட்டாலும் ப்ரீத்தி அஸ்ராணி சிறப்பாக நடித்துள்ளார்; பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. மேலும், இந்த மேடையில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பு வெளியானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
விஜய் ஆண்டனி இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ள இப்படத்தில் பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடும் ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.