அபிராமி ராமநாதன் தயாரிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி எழுதி, இயக்கி நடித்திருக்கும் படம் ‘ விநோதய சித்தம்.’ இப்படத்தில் தம்பி ராமையா, ஶ்ரீரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், இயக்குனர் பாலாஜிமோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இன்று நேரடியாக ‘ ZEE 5 ஒரிஜினல்‘ OTT தளத்தில் வெளியாகியுள்ள, ‘விநோதய சித்தம்‘ எப்படியிருக்கிறது?
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தனித்தனியானது. அவரவர் வாழ்க்கையினை அவரவர் தான் வாழமுடியும். ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் அதனுடைய பொறுப்பாளர்கள் பிள்ளைகளையும், குடும்ப உறுப்பினர்களையும் தன்னால் மட்டுமே சிறப்பாக வழிநடத்த முடியும் என நினைத்து, மற்றவரின் வாழ்க்கைக்குள் நுழைந்தால், என்ன நடக்கும் என்பதை ஃபேண்டஸி டிராமா திரைக்கதை மூலம் படமாக்கியிருக்கிறார், இயக்குனர் சமுத்திரக்கனி.
மரணம் என்பது எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் நடந்தே தீரும். அது முன்னரே நிர்னயிக்கப்பட்ட ஒன்று. யாருக்காகவும் யாரும் இயங்குவதை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. காலமும், சூழலும் அவர்களை இயக்கிக் கொண்டே இருக்கும்.
முடிந்தவரை அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யாதே. ஒரு வாழ்க்கை, ஒரே வாழ்க்கை. அதை சரியாக, நேர்மையாக வாழ்ந்துவிடு. என்பது, அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.
முனிஷ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, தீபக், சிவரஞ்சனி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட, படத்தில் நடித்துள்ள அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். ஒரு சில படங்களில் மட்டுமே இது நடக்கும்.
பரசுராம் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இவரைத்தவிர வேறு யாரும் இப்படி நடித்துவிடுவார்களா? என்ற சந்தேகத்தை எழுப்பிவிடுகிறார்.
‘காளன்‘ சமுத்திரக்கனியிடம் கெஞ்சும் இடத்திலும், போதையில் தன்னுடைய முதலாளி ஜெயப்பிராகாஷை திட்டுமிடத்திலும் இருவேறுபட்ட சிறப்பான நடிப்பு! சீரியஸான இடத்தில் ஒரு சிரிப்பையும் வரவழைக்கிறார்.
ஸ்ரீவத்சனின் கதைக்கு, சமுத்திரக்கனி அமைத்திருக்கும் திரைக்கதையும், என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அது போலவே இசையமைப்பாளர் சி.சத்யாவின் பின்னணி இசை.
அருவருக்கத்தக்க, கொடூர சைக்கோக்களின் கூடாரமாக இருக்கும் ‘OTT’ தளத்தில் இப்படி ஒரு படமா? ஆச்சர்யமாக இருக்கிறது.
‘விநோதய சித்தம்‘ பார்க்கலாம்!