பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க ‘தெருக்கூத்து’ கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது. நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான முனைவர் எல். ராமச்சந்திரன் பிரத்யேக முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.
‘தெருக்கூத்து’ கலைஞர்களின் வாழ்க்கையையும், அந்த கலையின் தனித்துவமான அடையாளத்தையும் ஆவணப்படுத்தும் வகையில் சர்வதேச தரத்துடன் புகைப்பட கோர்வையை உருவாக்கியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
”தமிழகத்தின் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான தெருக்கூத்து கலையையும், கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘தெருகூத்துக் கலைஞன்’ என்ற பெயரில் ஒரு உன்னதமான பணியில் ஈடுபட திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது இனிய நண்பரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை தொடர்புகொண்டேன். அவர் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி கேட்டறிந்ததும், உடனடியாக என்னுடைய புகைப்பட பாணியிலான கலைப் படைப்பிற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்தார். அவருக்கு இருக்கும் ஏராளமான பணிச்சுமையில் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சிறிதும் தாமதிக்காமல் நாட்காட்டிக்கான புகைப்பட படப்பிடிப்பிற்கு நேரம் ஒதுக்கினார். அத்துடன் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய தெருக்கூத்து கலைஞருக்கான ஒப்பனையை பொறுமையுடன் தெருக்கூத்து கலைஞர்களை உடன் வைத்துக்கொண்டு, இந்த கலை படைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார். தெருக்கூத்து கலைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நண்பர் விஜயசேதுபதி அளித்த ஊக்குவிப்பு ஒப்புயர்வற்றது. அதனை வார்த்தைகளால் விளக்கிட இயலாது.” என்றார்.