சேத்துமான் – விமர்சனம்!

2010  ஆம் ஆண்டில் ‘மாதொரு பாகன்’ நாவல் எழுதியதன் மூலம் சர்ச்சைக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகன். இவர் எழுதிய இன்னொரு சிறுகதை தான்  ‘வறுகறி’. இந்த சிறுகதையை தான் ‘சேத்துமான்’ என்ற பெயரில் திரைப்படமாக பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார்.  மே 27 ஆம் தேதி முதல் ‘ சோனி லைவ்’ ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. எப்படி இருக்கிறது பார்க்கலாம்.

மாட்டுக்கறி சாப்பிட்டதால் சிறுவன் அஸ்வினின் பெற்றோர்கள் சாதி வெறியர்களால் கொல்லப்படுகிரார்கள். இதனால் தாத்தா மாணிக்கத்திடம் வளர்கிறான். மூங்கில் கூடை விற்று பிழைப்பு நடத்தும் அப்பாவியான அவர் தனது பேரனை எப்படியாவது படிக்க வைத்து விடவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வருகிறார். அதோடு ஊரில் வசதி படைத்த பிரசன்னா பாலசந்திரனிடம் அவருக்கு உதவியாக அவர் சொல்லும் வேலைகளையும் செய்து கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பிரசன்னா பாலசந்திரனுடன் அவரது நண்பர்கள் பன்றிக்கறி சாப்பிட ஆசை பாடுகின்றனர். அதை வாங்கி சமைத்துக் கொடுக்க மாணிக்கத்தை வலியுறுத்துகின்றனர். அப்போது அங்கே ஒரு உயிர்ப்பலி ஏற்படுகிறது. ஏன் எதற்காக. என்பது தான் படத்தின் கதை.

பூச்சியப்பா கதாப்பாத்திரத்தில் தாத்தாவாக நடித்திருக்கும் மாணிக்கம் மிகச்சரியான தேர்வு. அவர் பேசும் வசனங்கள் கைதட்டலை பெறுகிறது.  இவருடன் பேரனாக நடித்திருக்கும் அஸ்வின் இந்த இருவரும் சேர்ந்து படத்தினை எதார்த்த நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

வெள்ளையன் என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் பிரசன்னா பாலசந்திரனும், அவரது மனைவி கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் சாவித்ரியும்  ரசிகர்களை சோர்வடையச் செய்யாமல் பார்த்து கொள்கிறார்கள். இந்த இருவருக்குமிடையே நடக்கும்  உரையாடல்கள் சிரிப்பினை வரவழைக்கிறது. இவர்கள் கொங்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் கதைக்களத்திற்கு மிகச்சரியாக பொருந்தி இருக்கிறார்கள். இருவருமே பல யூடிப்களில் நடித்து பெரிய ரசிகர் கூட்டத்தினரை வைத்திருப்பவர்கள். அது படத்திற்கு கூடுதல் பலம்.

எதார்த்தமான  காட்சிகளை  படமாக்கியிருக்கும்  ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு பாராட்டைப்பெறும். பன்றிக்கறி சமைக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் சாப்பிடாதவர்களையும் சாப்பிடத்தூண்டும்.

பிந்து மாலனியின் பின்னணி இசையும், பாடல்களும் கதைக்கு ஏற்ப இருக்கிறது. பல காட்சிகளில் இயற்கையான ஒலிகள்!? ரசிக்க வைக்கின்றன.

இயக்குநர் தமிழ் அழுத்தமானவர். வாழைப்பழத்தில் ஊசியேற்றும் திறன் மிக்கவர். பல காட்சிகளை பட்டவர்த்தனமாகவும், சில காட்சிகளை பூடகமாகவும் சித்தரித்துள்ளார்.

கருத்தாழமிக்க ஒரு கதையை வெகு ஜனமக்களுக்கு எளிதாக கொண்டு சேர்த்துள்ளார் ‘சேத்துமான்’ படத்தின் இயக்குனர் தமிழ்.