அருள்நிதி தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படமுமே வித்தியாசமாக இருப்பதுடன், அந்த படங்கள் வெளியாகும்போது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த வகையில் ‘எருமசாணி’ யூடியூபர் விஜய்குமாரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘D ப்ளாக்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறதா? பார்க்கலாம்.
ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார், அருள்நிதி. அதே கல்லூரியில் அவந்திகா மிஸ்ராவும் படித்து வருகிறார். இவர்கள் தங்கி படித்து வரும் கல்லூரியின் பின்புறமுள்ள வனப்பகுதியில் தொடர்ச்சியாக மாணவிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதை கல்லூரி நிர்வாகமும், போலீஸும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விடுகிறது. ஆனால் அருள்நிதி அதை நண்பர்களுடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார். அவர் தொடர் கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் ‘D ப்ளாக்’ படத்தின் மொத்தக் கதையும்.
கல்லூரி மாணவர் வேடத்தில் நடித்திருக்கும் அருள்நிதி தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அவருக்கு வலிய திணிக்கப்பட்ட ஹீரோயிசக் காட்சிகள் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ராவின் கதாபாத்திரம் வழக்கமான ஒன்று. அவரால் திரைக்கதையினில் எந்த பங்களிப்பும் பெரிதாக இல்லை. கல்லூரியின் வாட்ச்மேனாக நடித்திருக்கும் ரமேஷ் கண்ணாவும், பிரின்ஸ்பாலாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய்யும் மனதில் நிற்கிறார்கள்.ஆதித்யா டிவி கதிர், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரண்தீப் ஆகியோர் குறிப்பிடும் வகையில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் படத்தை இயக்கியிருப்பதுடன் நடித்திருக்கும் ‘எரும சாணி’ யூடியூபர் இயக்குநர் விஜய், தனது வழக்கமான நடிப்பின் மூலம் வந்து போகிறார்.
கல்லூரியின் உரிமையாளராக நடித்துள்ள கரு.பழனியப்பன் சாமியார்களையும், அரசியல்வாதிகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்.
சஸ்பென்ஸாகவும், த்ரில்லாகவும் திரைக்கதையினை எழுதி இயக்கியிருக்கிறார் ‘எரும சாணி’ யூடியூபர் விஜய். ஆனால் காமெடி, காதல் இரண்டும் சொதப்பல். கல்லூரியில் உலாவரும் மர்ம உருவம் கல்லூரி மாணவிகளை மட்டுமின்றி படம் பார்ப்பவர்களையும் பயமுறுத்துகிறது. மோசம் என சொல்லமுடியாத அளவிற்கு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார். இடவேளைக்குப் பிறகு சில மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தாலும் அது க்ளைமாக்ஸ் வரை தொடர்வது படத்தின் வெற்றி!
ஆங்காங்கே சில தடுமாற்றங்கள் இருந்தாலும் ‘D ப்ளாக்’ பாராட்டும்படியான படமாகவே இருக்கிறது.