‘அன்யா’ஸ்  டுடோரியல்’ – விமர்சனம்!

ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் நடிப்பினில் ‘ஆஹா’  தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இணைய தொடர் ‘அன்யா’ஸ்  டுடோரியல்’.  இத்தொடரை இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸின் உதவியாளர் பல்லவி கங்கிரெட்டி இயக்கியிருக்கிறார். அர்கா மீடியா தயாரித்துள்ளது.

கணவனை இழந்த ப்ரமோதினி பம்மி தனது மகள்களான ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் நிலவி வரும் நிலையில், நிவேதிதா சதீஷ் தனது அக்கா ரெஜினா கசாண்ட்ராவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய நிவேதிதா சதீஷ்க்கு, மற்ற குடியிருப்புவாசிகள் யாருமில்லாத ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சூழ்நிலை உருவாகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ‘அன்யா’ஸ்  டுடோரியல்’ என்ற பெயரில் ஒரு பக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். வழக்கம்போல் ஒரு நாள் லைவ் சாட் செய்யும் போது அவரது பின்னால் ஒரு மர்ம உருவம் தெரிகிறது. இதனை பார்த்து திகிலடைபவர்கள் நிவேதிதா வை எச்சரிக்கை செய்கின்றனர். அந்த மர்ம உருவம் மனிதனா, பேயா? என்பதை திகில் திரைக்கதையின் மூலம் திடிக்கிட வைத்திருக்கும் படம் தான் ‘அன்யா’ஸ்  டுடோரியல்’

அக்கா, தங்கையாக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் இருவருக்கும் ஒரே முக சாயல் இருப்பதால் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறார்கள். ரெஜினா கசாண்ட்ராவை காட்டிலும் நிவேதிதாவிற்கு அதிக காட்சிகள். எல்லாக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ரெஜினா கசாண்ட்ராவும் குறை சொல்லமுடியாதபடி நடித்திருக்கிறார். இவர்களுடம் நடித்த மற்றவர்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

தொடர் ஆரம்பித்தவுடனேயே ஒருவித திகில் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. அதற்கு காரணம் ஒளிப்பதிவும், இசையும் தான். ஒவ்வொரு காட்சிகளிலும் பயம் ஏற்பட வைத்திருக்கிறார்கள். சற்றே குழப்பமான திரைக்கதையில் சில இடங்களில் தடுமாற்றம் இருந்த போதிலும் ‘அன்யா’ஸ்  டுடோரியல்’ மிரட்டுகிறது.

அமானுஷ்ய விஷயங்கள் பற்றிய படம் பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்!

.