வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருபவர் நடிகர் வெற்றி. இவரது நடிப்பில் இந்த வாரம் வெளிவந்துள்ள படம், ‘ஜோதி’. கடலூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ‘மண்டேலா’ படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார். வெற்றிக்கு ஜோடியாக நடித்துள்ளார், கிரிசா குரூப்.
சேஸிஜெயா ஒளிப்பதிவு செய்ய இந்த படத்திற்கு ஹர்ஷவர்தர் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் கிருஷ்ணபரமாத்மா இயக்கியிருக்கிறார். பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த எஸ்.பி.ராஜா சேதுபதி SPR Studio production சார்பில் தயாரித்துள்ளார்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், வெற்றி தனது மனைவி கிரிசா குரூப்புடன் வசித்து வருகிறார். இவர்களின் எதிர் வீட்டில் கணவருடன் வசித்து வருகிறார் நிறைமாத கர்ப்பினியான ஷீலா ராஜ்குமார். ஒரு நாள் மர்ம ஆசாமி அவரின் வயிற்றை கீறி குழந்தையை எடுத்து சென்று விடுகிறார். சப் இன்ஸ்பெக்டர் வெற்றிக்கு இந்த கொடூரம் தெரிய வருகிறது. அவர் அந்த மர்ம நபரை கண்டுபிடிக்க களமிறங்குகிறார். அவர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ஜோதி படத்தின் கதை!
கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலகளவில் வெகு ஜோராக நடந்துவரும், குழந்தைகள் கடத்தலை மைய்யப்படுத்தி, அதை பகிரங்கப்படுத்தும் முயற்சியை செய்த, படத்தின் தயாரிப்பாளரையும், இயக்குனரையும் பாராட்டலாம். ஒரு சுமாரான பட்ஜெட்டில் மோசமில்லாத திரைக்கதையுடன், படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பல டிவிஸ்ட்டுகள் மூலம் ஒரு சஸ்பென்ஸ் திரைப்படமாக கொடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் நடிகர்களின் பங்களிப்பு கதாபாத்திரங்களுக்கு பொருந்தவில்லை! குறிப்பாக சப் இன்ஸ்பெக்டர் வெற்றியின் கதாபாத்திரத்தை சொல்லலாம். எல்லாக்காட்சியிலும் அவருடைய முகபாவனைகள் ஒரே மாதிரியாக இருப்பதால் ரசிக்கமுடியவில்லை.போலீஸுக்கே உரித்தான கம்பீரம் மிஸ்ஸிங்! அவரது உதவியாளராக வரும் குமரவேல் நன்றாக நடித்திருக்கிறார். அவரது விசாரணையில் சில காட்சிகள் பரபரப்பாக நகர்கிறது.
வெற்றியின் மனைவியாக வரும் கிரிசா குரூப் பரவாயில்லை!
கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார் எல்லாக் கட்சிகளிலுமே சிறப்பான பங்களிப்பினை கொடுத்துள்ளார். படம் பார்க்கும் தாய்மார்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தி பாராட்டை பெறுவார்.
முக்கிய திருப்புமுனை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ராஜா சேதுபதி, கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
மைம் கோபி, சாய் பிரியங்கா ருத் போன்றோரும் கவனம் பெறுகிறார்கள்.
டெக்னிக்கல் டீம்மை பொறுத்தவரை பெரிதாக சொல்ல எதுவும் இல்லை. என்றாலும் முழுமையான ஒரு படைப்பாக பார்க்கும்போது பரவயில்லை. எழுதி இயக்கியிருக்கும் ஏ.வி.கிருஷ்ண பரமாத்மாவை பாராட்டலாம்.