சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் , நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம், ‘திருச்சிற்றம்பலம்’.
மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’, திரைப்படம் தெலுங்கில் ‘திரு’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களை கவருமா? பார்க்கலாம்.
ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் தனுஷூம், நித்யா மேனனும் சிறுவயது முதலே குடும்ப நண்பர்கள். நித்யா மேனன் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். தனுஷ், ஃபுட் டெலிவெரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கிடையே ஆழமான நட்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தனுஷுக்கு ராஷி கண்ணாவின் மீதும், பிரியா பவானி ஷங்கர் மீதும் காதல் ஏற்படுகிறது. அதோடு தனுஷின் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் நிகழ்கிறது. அது என்ன? என்பதை காதல், எமோஷனல் கலந்த அழகான திரைக்கதையின் மூலம் சொல்லி இருக்கிறார், இயக்குனர் மித்ரன் ஜவஹர்.
கதாபாத்திரத் தேர்வும், அதற்கான நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்து இருக்கிறது. அதுவே படத்தின் பலமாகவும் இருக்கிறது. ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். முக்கியமாக ‘ஷோபனா’ கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன், அனைவரின் மனதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அவருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு நமக்கும் கிடைக்காதா? என, ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு நடித்துள்ளார்.
தனுஷ், அலட்டிக்கொள்ளாத நடிப்பு! தனது அம்மா, தங்கை மரணத்திற்கு காரணமான அப்பா பிரகாஷ்ராஜ் கட்டிலிலிருந்து கீழே விழும்போது அவரை தூக்கிவிடும் காட்சியிலும், ராஷி கண்ணாவிடம் காதலை சொல்லும் தருணத்தில், அவர் தனுஷூக்கு டிப்ஸ் கொடுக்கும் காட்சியிலும் தனுஷ் ரியாக்ஷன் சூப்பர்!
அதேபோல் ராஷி கண்ணா, தனுஷிடம் கடலைபோடுவதற்கும், காதலுக்குமான விளக்கம் கொடுக்கும்போது, இருவரின் ரியாக்ஷனுமே சூப்பர்.
பிரியா பவானி ஷங்கர் ஒரு சில காட்சிகள் வந்தாலும் குறை சொல்லமுடியாத அளவிற்கு வந்து செல்கிறார்.
தனுஷின் அப்பாவாக பிரகாஷ் ராஜூம், தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர். இருவருமே சிறப்பாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார், பாரதிராஜா. காதலுக்கு அவர் சொல்லும் விளக்கமும், தத்துவங்களும் சிறப்பு. தாத்தாவும் பேரனும் ஒன்றாக உட்கார்ந்து சரக்கு அடிப்பது என்பது மிக சாதரணமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ( குடிப்பழக்கம் இல்லாதவர்களையும் குடிக்கத்தூண்டும் காட்சி அமைப்பு! )
ஒரு சில காட்சிகளில் வரும் முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, மு.ராமசாமி ஆகியோரும் சிறப்பாகவே நடித்து இருக்கிறார்கள்.
அனிருத் இசை, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜிகே எடிட்டிங் மூன்றுமே திரைப்படத்தின் ரசிப்பினை மேம்படுத்தி இருக்கிறது.
சில தவறுகள் ஆங்காங்கே இருந்தாலும், ஒரே மாதிரியான காட்சியமைப்புகளை தவிர்த்து ஒரு உணர்வுபூர்வமான காதல், பொழுதுபோக்கு படத்தினை கொடுத்து இருக்கிறார். இயக்குனர் மித்ரன் ஜவஹர்.
‘திருச்சிற்றம்பலம்’ தனுஷுக்கு ஒரு வெற்றிப் படம்!