ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக திறன் கொண்டவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது இவர், எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ‘தி ஐ’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது. ஃபிங்கர்பிரிண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

நடிகை ஸ்ருதிஹாசன், ‘டிரெட்ஸ்டோன்’ எனும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமானவர்.

‘தி ஐ’ உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம். கதைப்படி, விதவை பெண் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்கு பயணிக்கிறார். அப்போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும், சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை.

இத்திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ மற்றும் ‘ஒன் டே’ ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் ரௌலி, ‘ட்ரூ ஹாரர்’ படப் புகழ் நடிகை அன்னா சவ்வா, ‘தி டச்சஸ்’ பட புகழ் நடிகை லிண்டா மார்லோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘தி ஐ’ படம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்,

‘இசையாலும், சினிமா எனும் காட்சி ஊடகத்தின் மூலமாகவும் கதைகளை பகிர்ந்து கொள்வது என்பது என்னுடைய கனவு. இந்த கனவினை தற்போது சர்வதேச அளவில் விரிவுப்படுத்தி இருக்கிறேன். ‘தி ஐ’ போன்ற அற்புதமான படைப்பில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான பெண்மணிகளால் வழி நடத்தப்படும் அணி என்பது இதன் கூடுதல் சிறப்பு. ‘தி ஐ’ ஒரு அழகான கதை. இதனை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.” என்றார்.