‘படவெட்டு’ (Padavettu)  – விமர்சனம்! (மலையாளம்)

நிவின்பாலி, அதிதிபாலன், ஷம்மி திலகன், ஷைன் டாம் சாக்கோ, இந்த்ரன்ஸ், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், படவெட்டு..

லிஜு கிருஷ்ணா  எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை யூடில் ஃபில்ம்ஸ் சார்பில் சன்னி வெய்ன், சித்தார்த் ஆனந்த்குமார், விக்ரம் மெஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

காலம்காலமாக கபட, அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக, மக்களுக்கு ‘இலவசம்’ என்ற பெயரில் அவர்களின் நலமும், வளமும் எப்படி சூறையாடப்படுகிறது. என்பதை விளக்கும் படமே, படவெட்டு!

விளையாட்டு வீரரான நிவின்பாலி ஒரு விபத்தின் மூலம் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறார். எந்த வேலைக்கும் செல்லாமல் முடங்கிப்போகிறார். குறு விவசாயத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், தனது அத்தையுடன் வாழ்க்கை நடந்து வருகிறது. பராமரிப்பின்றி இருக்கும் அவர்களது வீட்டினை இலவசமாக புதுப்பித்துத் தருகிறார், ஷம்மி திலகன். இந்த இலவசத்தை சிலர் கேலி செய்கின்றனர். அதோடு நிவின் பாலிக்கும், ஷம்மி திலகனுக்கும் இடையே மோதலும் உருவாகிறது. இந்த மோதலில் அவரது வீட்டையும் அந்த கிராமத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார், ஷம்மி திலகன். என்ன நடந்தது.. என்பது தான் படவெட்டு படத்தின் கதை.

எதிர்பாராத விபத்தில் வாழ்க்கையை தொலைத்து நிற்கும், விரக்தியான இளைஞனாக நிவின் பாலி சிறப்பாக நடித்து இருக்கிறார். அதிலும் சொஸைட்டியில் பால் ஊற்ற வரும்போது தனது காதலி அதிதி பாலனை சந்திக்கும் காட்சிகள் வேதனையின் உச்சம்! அதுபோல் க்ளைமாக்சில் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அதிதி பாலன், தனது காதலை சிலவற்றை வார்த்தகளாலும், பலவற்றை கண்களாலும் பேசுகிறார்.

ஷம்மி திலகன், குய்யாலி என்ற அரசியல்வாதி  கதாபாத்திரத்தில்  நடித்து மிரட்டியிருக்கிறார். இவர், தமிழ்ப் படங்களில் பிரபல வில்லனாக நடித்த திலகனின் மகன்.

நிவின் பாலியின் அத்தையாக நடித்திருக்கும் ரம்யா சுரேஷ், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவும்  கோவிந்த் வசந்தாவின் இசையும் சிறப்பாகவே இருக்கிறது.

அரசியல்வாதிகள் இலவசம் மூலம் எப்படி மக்களையும், அவர்களது வளத்தினையும் எப்படி ஆக்கிரமிக்கிறார்கள். என்பதை அழகாக சொல்லி விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தியிருக்கும் இயக்குனர் லிஜு கிருஷ்ணா  பாராட்டப்பட வேண்டியவர்.