ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, நட்டி நட்ராஜ் ஒரு யுடியூபர். போலீஸ் திணரும் குற்ற வழக்குகளில் தன்னுடைய தனி திறமை மூலம் வழக்குகளை முடித்து வைக்க போலீஸுக்கு துணையாக இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய அண்ணனின் மகள் தற்கொலை தொடர்பாக, ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியுடன் துப்பறிகிறார். அப்போது அந்த தற்கொலை தொடர்பாக சில தொடர் கொலைகள் நடந்து வருகிறது. அவர் குற்றவாளியை நெருங்கும்போது கல்லூரியில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்த பல திடுக்கிடும் விஷயங்கள் தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், ‘பகாசூரன்’.
பகாசூரன் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் நட்டிநட்ராஜ் இருவரும் நடித்துள்ளனர். இவர்களது கதாபாத்திரம் சரிவர வடிவமைக்கப்படவில்லை. என்பது இப்படத்தின் பெரும் பலவீனம். ஆக்ரோஷம் காட்டப்பட வேண்டிய இடங்களில் பரிதாபமாக காட்சியளிக்கிறார் செல்வராகவன். இயக்குனர் மோகன் ஜி, பீமராசு என்ற கதாபாத்திரத்தை எழுத்திலும், காட்சிகளிலும் கொண்டுவர முடியாமல் திணறியிருப்பது காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது. ஆண்டாண்டு காலமாக பீமன் உள்ளிட்ட வேடமேற்று கூத்தாடும் கலைஞன் எவ்வளவு சக்தி படைத்தவனாக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்!? கோட்டை விட்டுள்ளனர். கதாபாத்திரத்துடன் ஒன்றாத செல்வராகவனின் நடிப்பு சலிப்பினை ஏற்படுத்துகிறது.
உணர்ச்சி பெருக்குடன் காட்சிப்படுத்தப்பட வேண்டிய பாடல் ”சிவ சிவாய” பாடல் மோசமாக படமாக்கப்பட்டுள்ளது. இசைக்கேற்றபடி நடனம் அமைக்கப்படவில்லை. பாடலுக்கேற்ற முகபாவனையும் இல்லை. நடன இயக்குனர் எதை பற்றியும் கவலைப்படாமல் படமாக்கியிருப்பாரோ!? இப்பாடலைப் போலவே மன்சூர் அலிகான் பாடல் காட்சியும் அமைந்திருக்கிறது..
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜின் கதாபாத்திரப் படைப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை!
ஆனால் செல்வராகவனின் மகளாக நடித்திருக்கும் தாராக்ஷியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் அருமை. அதேபோல் டிக்டாக்கில் பிரபலமான லயாவின் நடிப்பும் பாராட்டும் படி இருக்கிறது. இவரது உடல் மொழியும் தோரனையும் அவரது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. லயாவை அடுத்தடுத்த படங்களில் எதிர்பார்க்கலாம்.
மற்றபடி படத்தில் நடித்த தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், கே.ராஜன், கூல் சுரேஷ் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தில் குறை இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றச் செயல்களை, பரபரப்பான க்ரைம் த்ரில்லராக உருவாக்க நினைத்த இயக்குநர் மோகன் ஜி, யூகிக்கக்கூடிய, சொதப்பலான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார்.
ஒரு விஷயத்திற்காக இயக்குநர் மோகன் ஜி யை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அதாவது பெண்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் அதை வீட்டில் உள்ளவர்களிடம் தவறாமல், தயங்காமல் சொல்ல வேண்டும் என்பதும், அதை பெற்றோர்கள் எப்படி அனுக வேண்டும் என்பது தான்.
ஒரு தொலைக்காட்சியின் முதலாளி, கல்லூரியின் தாளாளரை நினைவு படுத்துகிறது, வில்லனாக நடித்திருக்கும் ராதாரவியின் கதாபாத்திரம்.
இந்த கதாபாத்திரத்தை வடிவமைக்க எடுத்துக்கொண்ட சிரத்தையை கொஞ்சம் திரைக்கதையிலும் கதாபாத்திர வடிவமைப்பிலும் எடுத்திருந்தால் சிறந்த படமாக பகாசூரன் அமைந்திருக்கும்.