‘ரிப்பப்பரி’ – விமர்சனம்!

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில், இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியிருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் ‘ரிப்பப்பரி’. இதில் மாஸ்டர் மகேந்திரன், ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கிறது.

ரிப்பப்பரி திரைப்படத்திற்கு தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், திவாரகா தியாகராஜன். முகேன் வேல் எடிட்டிங் செய்திருக்கிறார்.

சற்றே வித்தியாசமான சாதிய பின்னணியில் உருவாகியிருக்கிறது, ‘ரிப் பப் பரி’ பேய்க்கதை. ஆங்கிலத்தில் இப்படத்தின் தலைப்பு, Rip Up Bury. அதாவது, தலையினை கொய்து புதைப்பதை உணர்த்துகிறது. கதைக்கு ஏற்ற தலைப்பு தான்.

‘தலைக்கரை’ கிராமத்துக்கு அருகில் இருக்கும் மகேந்திரன், தனது நண்பர்களுடன் இணைந்து யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது சேனலின் சப்ஸ்க்ரைபராக இருக்கும் ஒரு பெண், அவர் மீது காதலிலும் இருந்து வருகிறார்.

தலைக்கரை கிராமத்தில், சாதி விட்டு சாதி மாறி காதல் செய்யும் ஜோடிகளில், ஆண்களை மட்டும் கொன்று, அவர்களது தலையை வித்தியாசமான முறையில் அடைத்து வைக்கப்படுகிறது. அமானுஷ்யமாக நடக்கும் இந்த விஷயத்தால் கிராமமே திகிலில் இருந்து வருகிறது.

தலைக்கரை கிராமத்திலிருந்து மகேந்திரனின் நெருங்கிய நண்பன் தனது காதலியுடன் அவரது ஊரில் தஞ்சமடைய வருகிறார். ஆனால் மகேந்திரனின் நண்பனையும் அந்த அமானுஷ்ய சக்தி தலையை துண்டித்து கொன்று விடுகிறது. இதனால், அந்த ஊரின் இன்ஸ்பெக்டர் துணையுடன் அந்த அமானுஷ்யத்தை தேடிப் போகிறார் மகேந்திரன். இதன் பிறகு என்ன நடந்தது என்பதுவே, ரிப்பப்பரி படத்தின் கதை!

துறுதுறுவென்ற கிராமத்து இளைஞனாக மாஸ்டர் மகேந்திரன். நன்றாகவே நடித்திருக்கிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி சில இடங்க்களில் சிரிக்கவைக்கிறது. அதிலும் மகேந்திரனின் காதலிக்கு ரூட் விடும் இளைஞன், சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார்.

தமிழைத் தப்பாக எழுதும், பேய்க்கு காரணம் சொல்வது, சுருட்டுக்கு பொய் சொல்லும் போலிச்சாமியார், நாய்களின் ஆவியை பொம்மைக்குள் அடக்கிய இன்ஸ்பெக்டர் என ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

ஆரத்தி ,காவ்யா  என இரண்டு கதாநாயகிகள். இருவருமே குறிப்பிடத்தக்கபடி நடித்திருந்தாலும், காவ்யாவின் நடிப்பு நன்றாகவே இருக்கிறது. மகேந்திரனின் காதலியான ஆரத்தி டூயட்டுக்கு மட்டும்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை பரவாயில்லை.

சீரியசான சாதிப்பிரச்சனையை மய்யமாக வைத்து லாவகமாக திரைக்கதை அமைத்து , லாஜிக்கே இல்லாமல் ஒரு ஹாரர் டார்க் காமெடிப் படமாக, ரிப்பப்பரி படத்தினை இயக்கியிருக்கிறார். இயக்குநர் Na. அருண் கார்த்திக்.

பெரிதாக லாஜிக்கை எதிர்பார்க்காமல், அலட்டிக்காமல் ‘ரிப்பப்பரி’ படத்தினை பார்த்து ரசிக்கலாம்.