‘சொப்பன சுந்தரி’ – விமர்சனம்!

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம்  ‘சொப்பன சுந்தரி’. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டார்க் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் சொப்பன சுந்தரி படத்தை எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கிறார்.

‘சொப்பன சுந்தரி’ என்ற பெயர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.

பரிசு குலுக்கலில் விழுந்த கார் யாருக்கு சொந்தம்? என ஒரு குடும்பத்தினருக்குள் நடக்கும் கலட்டா தான், சொப்பன சுந்தரி படத்தின் கதை!

பால் பாக்கெட்டுகளை கடனுக்கு வாங்கும் நிலையிலிருக்கும் குடும்பத்தில், வேலைக்கு செல்லும் ஒரே பெண், ஐஸ்வர்யா ராஜேஷ். கல்யாணமாகாத இவருக்கு, கல்யாணமாகாத , வாய் பேச முடியாத அக்கா லட்சுமி பிரியா. இவர்களுக்கு முன்னதாகவே கல்யாணம் செய்து கொண்டு தனியாக சென்றுவிட்ட அண்ணன் கருணாகரன்.

தன்னுடைய காரில் வரும் கஷ்டமருக்கு நகை வாங்கிக் கொடுக்கும் கருணாகரனுக்கு ஒரு பரிசு கூப்பன் கிடைக்கிறது. அதை அந்தக்கடையில் வேலை செய்யும் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷின் முகத்தில் எரிந்து உதாசீனப்படுத்திவிட்டு செல்கிறார். அந்த கூப்பனக்கு ஒரு கார் பரிசாக கிடைக்கிறது.

அந்தக் காரை கொடுத்து தனது அக்காவின் கல்யாணத்தை நடத்த திட்டமிடுகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.  அந்த காரில் லட்சுமி பிரியாவுக்கு கார் ஓட்டக் கற்று கொடுக்கிறார், அவரது எதிர்கால கணவர்.. அப்போது ஒருவர் மீது கார் மோதி கீழே விழுகிறார். அவரை இருவரும் சேர்ந்து காரின் டிக்கியில் வைத்து பூட்டிவிடுகின்றனர்.

இந்நிலையில் காருக்கு சொந்தம் கொண்டாடி கருணாகரன் தகராறு செய்கிறார். இந்த மோதலில் கார் நொறுக்கப்பட்டு, போலீஸாரால் கார் பறிமுதல் செய்யப்படுகிறது. கார் யாருக்கு சொந்தம்? காரில் அடிபட்டு டிக்கியில் மறைக்கப்பட்டிருப்பவர் என்ன ஆனார்? எனபதே சொப்பன சுந்தரி படத்தின் டார்க் காமெடி திரைப்படத்தின் திரைக்கதை.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

இதன் பொருள் பிறரின் பொருளை சொந்தம் கொண்டாட முயன்றால், அவனுடன் சேர்ந்து அவன் குடும்பமும் சேர்ந்தே கெடும் என்பது தான்.

இந்தக் குறளினை மேற்கோள் காட்டித் திரைக்கதை அமைத்த இயக்குநரை பாராட்டலாம்.

நடிகர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். கார் பரிசு கிடைத்தவுடன் அவர் காட்டும் பாவனை அவர் கதாபாத்திரத்தை மேம்படுத்துகிறது அதேபோல் இன்ஸ்பெக்டர் சுனில் ரெட்டி தன்னிடம் அத்துமீறும் இடங்களில் எல்லாம் அவர் காட்டும் சீற்றம், சிறப்பு. பல காட்சிகளில், பல்வேறு முகபாவனைகளின் மூலம், ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார்.

வாய் பேச முடியாத ஐஸ்வர்யா ராஜேஷின் அக்காவாக லட்சுமிபிரியா. கல்யாண ஏக்கம், வெட்கம், அழுகை என எல்லா காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இவர்களை போலவே தீபா ஷங்கர், கருணாகரன், மைம் கோபி, சுனில் ரெட்டி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறார்.

ஒளிப்பதிவு, இசை இரண்டும் குறை சொல்லும்படி இல்லை.

டார்க் காமெடி படமாக எடுக்க தீர்மானித்த பிறகு, இயக்குனர் சீரியஸையும் காமெடியையும் கலந்து கொடுத்திருப்பது பலவீனம்.

கணவனை கொலை செய்யும் தீபா ஷங்கர், அதற்கு உடந்தையாக இருக்கும் மகள்கள் என பல இடங்களில் நெருடல். டார்க் காமெடி என சொல்லப்பட்டாலும், இந்த மாதிரியான காட்சிகளை தமிழ் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். கொலை செய்யத் துணிந்தவர்கள் காரை எப்படி திரும்பக் கொடுப்பார்கள்?

க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் அம்மாவும், பெண்ணும் நீலப்படங்களில் வரும் முக்கல், முனகல் காட்சியும் தேவையற்றது. திருக்குறளை மேற்கோள் காட்டி திரைக்கதை அமைத்த இந்த படத்திற்கு தேவையற்றது.

மொத்தத்தில் ‘சொப்பன சுந்தரி’ ஓகே.!