‘திருவின் குரல்’ – விமர்சனம்!

அருள்நிதியின் அப்பா பாரதிராஜா ஒரு விபத்தில் காயமடைகிறார். அதற்கான சிகிச்சைக்கு ஒரு அரசு மருத்துமனைக்கு அவர் அழைத்து செல்லப்படுகிறார். அந்த அரசு மருத்துவமனையில் சட்ட விரோதமான கொடுஞ்செயல்களை செய்யும் நான்கு பேருக்கும் அருள்நிதியின் குடும்பத்திற்கும் இடையே பகை உருவாகிறது. கொலைக்கு அஞ்சாத அந்த நான்கு பேர் கும்பலிடமிருந்து அருள்நிதி தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார், என்பதே திருவின் குரல் படத்தின் கதை!

அரை குறையாக காதுகேட்காத, வாய்பேச இயலதாத இளைஞனாக அருள்நிதி அவரது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்துள்ளார். சில இடங்களில் அப்படி, இப்படி இருந்தாலும் பரவாயில்லை! நன்றாகவே நடித்திருக்கிறார்.

ஆத்மிகாவின் கதாபாத்திரத்திற்கு பெரிதாக நடிப்பு தேவைப்படவில்லை! அவரை பார்க்க முடியும் அளவிற்கு நடித்துள்ளார்.

பாரதிராஜா கதாபாத்திரத்தின் தேவையை அவரது வயதான தோற்றமும், நடிப்பும் நியாயப்படுத்தி விடுகிறது.

திருவின் குரல் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கதாபாத்திரங்கள் என்றால், அஷ்ரஃப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மஹேந்திரன் என்ற  அந்த நான்கு வில்லன்கள் தான்.  அதிலும் லிஃப்ட் ஆபரேட்டர் அஷ்ரஃப்பை பார்த்தவுடன், மிரளாதவர்களும் சற்றேனும் மிரளுவார்கள்!

வழக்கம்போல் சாம்.சி.எஸ் பின்னணி இசையில் சொதப்பியிருக்கிறார். பேமிலி செண்டிமெண்ட் காட்சிகளில் சற்றே ஒகே!

பல படங்களில் பார்த்து சலித்துப்போன கதையாக இருப்பதால் அலுப்பு ஏற்படுகிறது. அதிகமான படங்களை பார்ப்பவர்கள் கதையின் ஓட்டத்தை முன்னமே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம். நம்பமுடியாத காட்சிகளும், லாஜிக் மீறல்களும் படத்தின் பெரும் பலவீனம்.

வழக்கமான கதையாக இருந்தாலும், அதை சற்றே மாறுபட்ட முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ஹரிஷ் பிரபு.

மொத்தத்தில், ‘திருவின் குரல்’, திரு’வைப்போலவே!