தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த ‘ஏவிஎம் ஹெரிடேஜ்’ மியூசியம்!

இந்தியத் திரையுலகின் புகழ் மிக்க அடையாளங்களில் ஒன்று, ஏவிஎம் (AVM) நிறுவனம். பாரம்பரியமிக்க இந்நிறுவனம் புகழ்பெற்ற பல கலைஞர்களையும், தொழிநுட்ப கலைஞர்களையும் உருவாக்கியுள்ளது. கடந்த 75 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம், படப்பிடிப்பின் போது பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களை கொண்டு ‘ஏவிஎம் ஹெரிடேஜ்’ மியூசியத்தை உருவாக்கியுள்ளது.

சென்னை, வடபழனி, ஏவிஎம் ஸ்டுடியோஸ், 3 வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள, “ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தினை “(AVM Heritage Museum) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைத்தார். அவருடன் ஏவிஎம் நிறுவனத்தை சார்ந்த ஏவிஎம்.சரவணன், எம்.எஸ்.குகன், அபர்ணா குகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் T.R. பாலு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகுமார், இயக்குனர் S.P.முத்துராமன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘ஏவிஎம் ஹெரிடேஜ்’ மியூசியத்தில் AVM நிறுவனம் சினிமாவுக்கு பயன்படுத்திய கருவிகள், A.V. மெய்யப்ப செட்டியார் பயன்படுத்திய கார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் உயோபடுத்திய பொருள்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘ஏவிஎம் ஹெரிடேஜ்’ மியூசியத்தை பொது மக்கள் பார்வைக்காக, செவ்வாய் கிழமை தவிர்த்து, பிற நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.