‘சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன் ,பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) ,வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ள படம், துரிதம். இப்படத்தினை எழுதி, இயக்கியிருக்கிறார், ஶ்ரீனிவாசன். தயாரித்திருக்கிறார், திருவருள் ஜெகநாதன்.
சாதியப்பற்று மிக்க ஏ.வெங்கடேஷின் மகள் ஈடன், சென்னையில் தங்கி ஒரு ஐ டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கும், அலுவலகத்திற்கும் காரில் ஏற்றிகொண்டு போய் விடும் வேலையை செய்து வருகிறார், கால் டாக்ஸி டிரைவர் ஜெகன். இவர்களுக்குள் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பினை ஜெகன் காதலாக பாவித்து, ஒரு தலையாக காதலித்து வருகிறார். ஈடனின் அப்பா ஏ.வெங்கடேஷின் நிர்பந்தம் காரணமாக சொந்த ஊருக்கு செல்லவிருக்கும் ஈடன், ஜெகனுக்கு ஒரு பரிசை கொடுக்கிறார். சென்னைக்கு இனிமேல் திரும்ப வரமுடியாத சூழ்நிலையால் தனது தோழிகளுடன் இரவு முழுக்க சென்னையை சுற்ற முடிவு செய்கின்றனர். இதன் காரணமாக, காலையில் ஊருக்கு செல்ல வெண்டிய ட்ரெயினை தவற விடுகிறார். தோழிகளின் ஆலோசனையின் படி பைக்கில் ஊருக்கு செல்லும் ஜெகனுடன் செல்ல வற்புறுத்துகிறார்கள். ஈடனும் வேறு வாய்ப்பு இல்லாததால் அவருடன் செல்ல முடிவெடுக்கிறார். வழியில் பைக் ரிப்பேராகி நிற்க, காரில் வரும் ராமச்சந்திரன் (ராம்ஸ்) ஈடனை கடத்தி செல்கிறார். இதற்கு பிறகு என்ன நடந்த்து என்பது தான், துரிதம் படத்தின் மொத்தக் கதையும்.
துரிதம் படத்தின் தொடக்கத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகத்துடன் தொடங்கும் திரைக்கதை, ரசிகர்களை கொஞ்சம் சோதிக்கிறது. பாலசரவணன் அவ்வப்போது அதை சரி செய்தாலும் இடைவேளை முன்புவரை சுவாரசியமின்றி செல்கிறது. ஜெகன், ஈடன் பைக் பயணம் ஆரம்பித்த பிறகு, ‘துரிதம்’ என்ற தலைப்பிற்கேற்றபடி வேகமெடுக்கும் திரைக்கதை க்ளைமாக்ஸ் வரை செல்கிறது. க்ளைமாக்ஸும் சிறப்பாகவே இருக்கிறது.
‘சண்டியர் ஜெகன், மாரிமுத்து கதாபாத்திரத்தில் காதல் கைகூடாத இளைஞனாக நடித்திருக்கிறார். ஈடன், வானதி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களும், வானதியின் தோழிகளாக நடித்திருப்பவர்கள் என எல்லோரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளனர்.
வானதியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஏ.வெங்கடேஷூக்கு பெரிய அளவில் வசனம் இல்லை என்றாலும், மிரட்டுகிறார்.
பாலசரவணன் பரவாயில்லை.
ஹோட்டல் மாஸ்டராக நடித்திருக்கும் பூ ராமுவின் கதாபாத்திரம், வலிய திணிக்கப்பட்ட ஒன்று. ராமச்சந்திரன் (ராம்ஸ்) வில்லனாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு கதாபாத்திரங்களால் சாதியினை உட்புகுத்தி கதையை வேறு திசைக்கு கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ஶ்ரீனிவாசன்.
பைக், கார் , வேன்,பஸ், ட்ரெயின் என செல்லும் திரைக்கதை, பட்ஜெட் பற்றாக்குறையால் மேக்கிங்கில் தடுமாறியிருந்தாலும், முடிந்தவரை நியாயம் சேர்த்துள்ளனர்.
சின்னக் கதை, கிடைத்த பட்ஜெட் இவற்றை வைத்துக்கொண்டு ஒரு தரமான படத்தினை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். பரவாயில்லை!