கதையை சொல்லாமல் விமர்சனம் செய்யுங்கள்! – போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’.  இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.

போர் தொழில் குறித்து படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா கூறியதாவது…

‘இயக்குநராக இருந்தாலும் எந்த விமர்சனத்தையும் சாதகமாகவே எடுத்துக் கொள்வேன். ‘போர் தொழில்’ போன்றதொரு படத்தை உருவாக்குவதற்கு தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் இல்லை என்றால் சாத்தியமாகி இருக்காது. நான் இந்த படத்தை நினைத்த மாதிரி சுதந்திரமாக உருவாக்கி இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களை நன்றி தெரிவிக்க வேண்டும் என ஒரு பட்டியலை தயாரித்தேன் அது மிக நீண்டதாக இருந்தது. அதனால் அனைவருக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் இயக்குநர் என என்னுடைய பெயர் இடம் பெற்றிருந்தாலும், இதன் பின்னணியில் பலரின் கூட்டு முயற்சி இருந்திருக்கிறது. நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. இருப்பினும் அனைவரும் பல விதங்களில்.. பல விசயங்களில்.. கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் – புலனாய்வு பாணிலான திரில்லர் திரைப்படம். படம் பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தந்த ஐந்து நிமிடத்திற்கு பின் புத்திசாலித்தனமாகவும், உணர்வுபூர்வமாகவும் இப்படத்தின் கதை அமைந்திருப்பதை உணர்வீர்கள், என வாக்குறுதி அளிக்கிறேன். பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காமல் இப்படத்தில் திரைக்கதையை அடர்த்தியுடன் உருவாக்கி இருக்கிறோம்.

படத்தைப் பார்த்த பிறகு கதையை விவரிக்காமல், விமர்சனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் இது சாத்தியமா? என தெரியவில்லை. ஏனெனில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் போது கிடைக்கும் பரவச உணர்வு… ஐந்து நாட்களுக்குப் பிறகு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம், என்றார்.