‘லால் சலாம்’ –  விமர்சனம்! 

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், கே.எஸ்.ரவிக்குமார், செந்தில், ஜீவிதா, நிரோஷா, அனந்திகா சனில்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், லால் சலாம். லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எழுதி இயக்கியிருக்கிறார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

மூரார்பாத். தென்னாற்காடு மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள கிராமம். இந்த கிராமத்தில், மத நல்லிணக்கம், காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல்வாதிகளான கே.எஸ் ரவிக்குமாரும், போஸ்டர் நந்தகுமாரும் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக, கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மூலம், கிராம மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். இதில், விஷ்ணு விஷாலால், ரஜினிகாந்தின் ஒரே மகனான, விக்ராந்த் கடுமையாக தாக்கப்படுகிறார். கிராமம் முழுவதும், கே.எஸ் ரவிக்குமாரும், போஸ்டர் நந்தகுமாரும் எதிர்பார்த்தபடி, மதக்கலவரம் வெடிக்கிறது. ரஜினிகாந்த் பழிவாங்க களத்தில் இறங்குகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், லால் சலாம் படத்தின் கதை.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களில், விஷ்ணு விஷால் நடிப்பதற்கு ஏராளமான காட்சிகள். விக்ராந்திற்கு, குறைவான காட்சிகளே கிடைத்திருக்கிறது. இருவரும் தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து, நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இடையே நடக்கும் மோதல் காட்சிகள், பதபதப்பை ஏற்படுத்தவில்லை! இஸ்லாமியரான விக்ராந்த், இந்து மதத்தை சேர்ந்த விஷ்ணு விஷால் மீது கோபம் கொள்ளும் காட்சிகளில் போதிய அழுத்தமோ, வசனமோ இல்லை!

விஷ்ணு விஷாலின் அம்மாவாக ஜீவிதாவும், விக்ராந்தின் அம்மாவாக நிரோஷாவும், சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில், ரஜினிகாந்த், நிரோஷா, விக்ராந்த் இடம் பெறும் சில காட்சிகள், கண்களில் நீரை வரவழைக்கிறது.

தம்பிராமையா, தனது வழக்கமான நடிப்பினை கொடுத்திருக்கிறார். விவேக் பிரசான்னா, சிறப்பாக நடித்திருக்கிறார். விவேக் பிரசன்னா க்ளைமாக்ஸில் திருந்துவது, சினிமாவுக்கே உரிய போங்கு!

விக்ராந்தின் அப்பாவாக, மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், ரஜினிகாந்திற்கு சில சண்டைக்காட்சிகள் மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசும் காட்சிகள். குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.

அரசியல் லாபத்திற்காக, நடந்துவரும் மோதல்கள் குறித்து இப்படம் பேசியிருப்பதற்காக, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டலாம். சரியான தருணத்தில் இப்படம் வெளியாகியிருப்பது சிறப்பு. அதோடு திருவிழாவிற்கான காரணம் குறித்து செந்தில் மூலமாக பேசியிருப்பதும் சிறப்பானது தான்.

கபில் தேவ் வரும் காட்சிகள், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு, ஏ.ஆர். ரஹ்மான் இசை, இரண்டுமே படத்தின் பலமாக இருக்கிறது. ஒப்பனை மட்டுமே படத்தின் பெரும் பலவீனம். சில இடங்களில் தேவையற்ற காட்சிகள் இருப்பதை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக மாரியம்மன் போல் வேடமிட்டிருப்பவர், ‘காந்தாரா’ போல் கர்ஜிப்பது உள்ளிட்ட காட்சிகள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்!

இன்றைய அரசியல் சூழ்நிலையில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வந்திருக்கும் லால் சலாம் படத்தை, எந்தவிதமான பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால், உங்களை ஏமாற்றாது!