MILLION DOLLAR STUDIOS & MRP ENTERTAINMENT நிறுவனங்கள் சார்பில், நஸிரத் பசிலியன் , மகேஷ் ராஜ் பசிலியன் , யுவராஜ் ஆகியோர் தயாரித்துள்ள படம், லவ்வர். இதில் மணிகண்டன், ஶ்ரீ கௌரி ப்ரியா,கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், ரிணி, நிகிலா ஷங்கர், அருணாசலச்சேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபுராம் வியாஸ் எழுதி, இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு ஸ்ரேயஸ் கிருஷ்ணா, இசை ஷான் ரோல்டன்.
சங்க கால மடலேறு காதலில் இருந்து, இன்றைய மடிக்கணினி காதல் வரை, காதலர்கள் பிரிவதும், இணைவதும் காலகாலமாக இருந்து வரும் ஒன்று தான். நவீன சைபர் யுக காதலில், காதலின் புரிதலும், பிரிதலும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஐடி துறை காதலர்களின் வாழ்க்கையை சொல்லும் படமே லவ்வர்.
மணிகண்டனும், ஶ்ரீ கௌரி ப்ரியாவும் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மனதளவிலும், உடலளவிலும் நெருக்கமாக இருந்து வரும் காதலர்கள். ஶ்ரீ கௌரி ப்ரியா ஐடியில் வேலைபார்த்து வருகிறார். இவர் மீது மணிகண்டனுக்கு ஓவர் பொஸஸிவ்னஸ். தனக்கு பிடித்த தொழிலை செய்ய பணமில்லாமலும், தன்னுடைய வீட்டின் சூழ்நிலையாலும், ஒரு இறுக்கமான மன நிலையில் இருந்து வருகிறார். அதோடு நண்பர்களுடன் சேர்ந்து குடித்தும் வருகிறார். இதனால், இவர்களுக்குள் அவ்வப்போது சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் மணிகண்டனிடமிருந்து விடுபட விரும்புகிறார், ஶ்ரீ கௌரி ப்ரியா. ஆனால், மணிகண்டன் அதற்கு மறுக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் லவ்வர் படத்தின் கதை.
இயக்குநர் பிரபுராம் வியாஸ், இன்றைய இளைஞர்களின் காதலை வெகு சிறப்பாக படமாக்கியிருக்கிறார். காதலர்கள் ஒருவருக்கொருவர், மற்றவரின் மனது கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, சொல்லப்படும் பொய், பிரச்சனைகளை எப்படி பெரிதாக்குகிறது என்பதையும், என்ன தான் லவ்வராக இருந்தாலும், பல வருடங்கள் ஒன்றாக வாழமுடியாது என்ற பட்சத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு, எப்படிப்பட்ட சூழலை உருவாக்குகிறது என்பதையும் அழகாக விவரித்துள்ளார். வசனங்கள், பல காட்சிகளில் பளிச்சிடுகிறது. பல காட்சிகள் இன்றைய இயல்பு நிலையை எடுத்துக்கூறுவது சிறப்பு!
கதாபாத்திரத்தை நன்கு, உணர்ந்து நடித்துள்ளார், மணிகண்டன். குடும்ப சூழல், பிடித்த தொழில் தொடங்க முடியாமை, காதலியின் மேல் ஓவர் பொஸஸிவ்னஸ் என்ற நிலையில், ஒருவனின் மனம் என்னவாக இருக்கும். என்பதை அழகாக பிரதிபலித்திருக்கிறார். அதிலும், கண்ணா ரவியைப் பார்த்து காண்டாவதும் சிறப்பு.
‘மாடர்ன் லவ் சென்னை‘ வெப் சீரிஸ் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஸ்ரீகௌரி ப்ரியா, நடித்த அத்தனை காட்சிகளிலுமே, தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில், மணிகன்டனை பிரிய மனமில்லாமல் தயங்கும் சமயத்திலும், நண்பர்களிடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் போதும், தனது துயரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நெருக்கமான காட்சிகளிலும் கவருகிறார்.
மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா இருவருமே உணர்வுகளை, சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களது நண்பர்களாக நடித்திருக்கும், கண்ணா ரவி, ஹரிஷ் குமார், ரிணி, நிகிலா ஷங்கர், அருணாசலச்சேஸ்வரன் ஆகியோரும் குறை சொல்லமுடியாத அளவிற்கு நடித்துள்ளனர். மணிகண்டனின் அப்பா, அம்மாவாக நடித்திருக்கும் சரவணன், கீதா கைலாசமும் ஓகே தான்.
ஒளிப்பதிவு செய்துள்ள ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், இசையமைத்துள்ள ஷான் ரோல்டனின் இசையும் படத்தின் பலம்.
படத்தின் மிகப்பெரும் குறையாக இருப்பது, குடிக்கும் காட்சிகள் தான். எத்தனை விதமான போதை வஸ்த்துக்கள் இருக்கிறதோ, அனைத்தையும் காட்டியிருக்கிறார் இயக்குனர், பிரபுராம் வியாஸ். எந்தவிதமான குற்ற உணர்ச்சியுமின்றி, சர்வசாதரணமாக காட்சிப்படுத்தியிருப்பது அவலம், சமூக பொறுப்பற்ற செயல். காட்சிக்கு காட்சி சிகரெட் பிடிப்பதும் குடிப்பதும் தான். தியேட்டருக்குள் இருப்பவர்களுக்கு மூச்சு முட்டாத குறை. ஒவ்வொரு காட்சிகளும், போதை பழக்கத்திற்கு தூண்டுவதாக இருக்கிறது.
லவ்வர், டிஜிட்டல் யுக காதல் பிரிவு!