‘பாவகி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில், ஜெயச்சந்தர் பின்னம்நேனி மற்றும் பாலாஜி மாதவன் இணைந்து தயாரித்துள்ளதுடன் இயக்கியிருக்கும் படம், இடி மின்னல் காதல்.
இடி மின்னல் காதல் படத்தில், சிபி மற்றும் பவ்யா த்ரிகா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன் ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெய் ஆதித்யா, ஜெகன், வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத், மோனா பெத்ரே, அனுஷா, ஸ்ரீ ராம், சோமு, சிவராஜ், ருத்ரு மற்றும் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்த யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடித்துள்ளனர்.
சிபி – பவ்யா த்ரிகா இருவரும் காதலர்கள். வெளிநாடு செல்லத்தயாராக இருக்கிறார் சிபி. அதற்கு முன், இருவரும் காரில் ஜாலியாக சுற்றிவர விரும்புகின்றனர். அப்போது இவர்களது காரில் ஒருவர் அடிபட்டு இறந்து விட, அதை போலீசிடம் மறைப்பதுடன், சிபி வெளிநாடு செல்ல, பவ்யா த்ரிகா அனைத்து உதவிகளையும் செய்கிறார். இதற்கிடையே ஆக்சிடென்டில் இறந்தவரின் மகன் சிறுவன் ஆதித்யா அதை தாங்கிகொள்ள முடியாமல் தவிக்கிறான். சிறுவனின் நிலை கண்ட பாலியல் தொழிலாளி யாஸ்மின் பொன்னப்பா அவனுக்கு ஆதரவு கொடுக்கிறார்.
சிறுவன் ஆதித்யா அப்பா வாங்கிய கடனுக்காக, கடன் கொடுத்த தாதா வின்செண்ட் நகுல், சிறுவனை இழுத்துச்செல்ல முயற்சிக்கிறார். இந்நிலையில், அவரிடமிருந்து சிறுவன் ஆதித்யாவை சிபி காப்பாற்ற முயற்சிக்கிறார். இதற்கு பிறகு தனது அப்பாவின் சாவுக்கு காரணம் சிபி என்பதை உணரும் சிறுவன் ஆதித்யா பழி தீர்க்க விரும்புகிறான். இதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களே இடி மின்னல் காதல் படத்தின் கதை.
சிபி, காதல் காட்சிகளிலும், ஆக்ஷன் அதிரடி காட்சிகளிலும் கவன்ம் ஈர்க்கிறார். ஆக்ஷன் ஹீரோக்கான தகுதிகளுடன் இருப்பது சிறப்பு! நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இவரது திறமை சிறப்பாக வெளிப்படும்.
பவ்யா த்ரிகா, அழகாக இருக்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்தி நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
தாதவாக நடித்திருக்கும் வின்செண்ட் நகுல், எரிச்சலை ஏற்படுத்துகிறார். படத்திற்கு மிகப்பெரிய பலவீனம், இந்த வில்லன் கதாபாத்திரம் தான். இவருக்கான ஓவர் பில்டப் பொருந்தவில்லை!
மன நிலை சற்றே பாதிக்கப்பட்ட பாசத்திற்கு ஏங்கும் சிறுவனாக ஆதித்யா கவனம் பெறுகிறார். க்ளைமாக்ஸில் ஆசிட்டை குடிக்கச்சொல்லி சிபியை வற்புறுத்தும் காட்சி சூப்பர்!
சிறுவனை அரவணைக்கும், பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பா ஓகே!
மற்றபடி, கிறிஸ்தவ பாதிரியராக நடித்திருக்கும் ராதாரவி, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், சிபியின் நண்பராக நடித்திருக்கும் ஜெகன், சிறுவன் ஆதித்யாவின் தந்தையாக நடித்திருக்கும் மனோஜ் முல்லத் உள்ளிட்டோரும் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
ஜெயச்சந்தர் பின்னம்நேனியின் ஒளிப்பதிவு, சாம்.சி.எஸ் இசை, இரண்டும் படத்தின் பலமாக இருக்கிறது.
இயக்குநர் பாலாஜி மாதவன், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.!