லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். எஸ். துரை செந்தில்குமார். இதில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, சமுத்திரக்கனி, மைம் கோபி, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ளனர். சூரி நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படமான, கருடன் எப்படியிருக்கிறது?
ஜமீன் வாரிசுதாரரான உன்னி முந்தன், வடிவுக்கரசியின் பேரன். சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். உன்னி முந்தனின் தீவிர விசுவாசி சூரி.
வடிவுக்கரசி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரின் கட்டுப்பாட்டிலிருக்கும், ஒரு அம்மன் கோவிலுக்குரிய சுமார் 300 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள நிலம் இருக்கிறது. இது, அந்த கோவில் நிர்வாகத்திற்கே தெரியவில்லை. ஆனால், அமைச்சராக இருக்கும் ஆர். வி. உதயகுமாருக்கு தெரிய வருகிறது. அவர் அந்த நிலத்தினை அபகரிக்க திட்டமிடுகிறார். அதற்காக தனது உறவுக்கரரான மைம் கோபி மூலம் அதை செயல்படுத்த முயற்சிக்கிறார். அதற்கு இடையூறாக சசிகுமார் இருக்கிறார். அதனால், உன்னி முகுந்தன் மூலம் சசிகுமாரை தீர்த்துகட்ட அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் முடிவு செய்கிறார். திட்டமிட்டபடி, நிலத்தை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் அபகரித்தாரா, இல்லையா? என்பதே ‘கருடன்’ படத்தின் கதை.
‘ஆதி’ என்ற கதாபாத்திரத்தில் சசிகுமார். கதாபாத்திரத்திற்கேற்றபடிக்ஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். உன்னி முகுந்தனின் சிறந்த நண்பராக நடித்து, ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடித்துவிடுகிறார்.
‘கர்ணா’ என்ற கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன். சசிக்குமாரின் நண்பராகவும், வாழ்ந்து கெட்ட ஜமீனாகவும், பணம் இல்லாமல் ஏற்படும் மன வலியை மிக நேர்த்தியாகவும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
‘சொக்கன்’ என்ற கதாபாத்திரத்தில் சூரி. உன்னி முகுந்தனின் சிறந்த விசுவாசியாக அவரது கால்களை சுற்றி வருகிறார். ஒரு பக்கம் விசுவாசம். மறுபக்கம் நியாயம். இரண்டு பக்கமும் நிற்க முடியாமல் தவிப்பது, சிறப்பு. தனது நடிப்பினை அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சூரி, சண்டைக் காட்சிகளில் கடினமாக உழைத்து, அவரது ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார்.
வெற்றி மாறனின் கதை. தமிழ் சினிமாவின், அதிலும் மதுரை பின்னணியில் வழக்கமான நட்பு , நட்புக்குள் துரோகம், பழிக்குப் பழி கொலைகள். என கதை இருந்தாலும்க்ஷ் இயக்குநர் துரை செந்தில்குமாரின் மாறுபட்ட திரைக்கதையால், கருடன் ரசிகர்களை வசீகரிக்கச் செய்கிறது.
முதல் பாதியை விட, இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது.
‘விடுதலை’ படத்திற்கு பிறகு, ’கருடன்’ படத்திலும் சூரியின் நடிப்பு ரசிக்கப்படும்!