‘தி அக்காலி’ – விமர்சனம்!

“பி பி எஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரித்து, முகமத் ஆசிப் ஹமீது இயக்கியிருக்கும் படம் ‘தி அக்காலி’. இதில் நாசர், ஜெயக்குமார், ‘தலைவாசல்’ விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா, வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘சாத்தானியம்’ அதாவது சாத்தான்களை வழிபடுபவர்களின், அமானுஷ்ய உலகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை பற்றிய திகில் படம் தான், ‘தி அக்காலி’. எப்படியிருக்கிறது?

கதை நடக்கும்  ஆண்டு 2016. ஒரு ஹை ப்ரொஃபைல் கேஸ் இன்வெஸ்டிகேஷன். அதன் அதிகாரி ஸ்வயம் சித்தா. அமானுஷ்ய மரணங்கள் தொடர்பான விசாரணையை, காவல்துறை அதிகாரியாக இருந்த ஜெய்குமாரிடம் விசாரித்து வருகிறார். இது சம்பந்தமான காட்சிகள், கிறிஸ்தவர்களின் கல்லறையிலிருந்து தொடங்குகிறது.

அந்த கல்லறையில் புதைக்கப்பட்ட  உடல்கள், தோண்டி எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. போலீஸ், போதை பொருள் கடத்தல் கும்பலின் வேலையாக இருக்கும் என சந்தேகிக்கிறது. தொடர்ந்து விசாரணை செய்யும் போது, அமானுஷ்ய மரணங்களின் பின்னணி குறித்த சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கிறது.

போலீஸாரின் தொடர் விசாரணைக்குப் பிறகு, சாத்தான்களை வழிபடுபவர்களைப் பற்றியும், நரபலிகள் பற்றியும் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் பிறகு நடந்தது என்ன? என்பதுதான், ‘தி அக்காலி’ படத்தின் கதை.

சாத்தானியம், திகில், மர்மம் போன்ற கதைகளுக்கு, திரைக்கதையில் உத்தி நுணுக்கங்கள் இல்லையென்றால், அது சிறப்பாக அமையாது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தினை சொல்லவேண்டுமென்றால், நம்பிக்கையூட்டும் திரைக்கதை வடிவமைப்பு தேவை! இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங்க். இந்தப் படத்தின் திரைக்கதையை, நான் லீனியர் முறையில் சொல்லி, அதற்குள் ஒரு ஃப்ளாஷ்பேக்கினையும் சொல்லி படம் பார்ப்பவர்களை குழப்பியிருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருப்பவ்ர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். இதில் சிலரது நடிப்பு மிகையாக இருக்கிறது.

முதல் பாதி திரைக்கதையை ஜெயக்குமார் ஜெய்க்குமார் தாங்கிச் செல்கிறார். இரண்டாம் பாதி திரைக்கதையை, இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் நாசர் தாங்கிச் செல்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் முகமது ஆசிப் ஹமீத், நரபலி  கதையை குழப்பத்துடன் சொல்லியிருப்பதால், ரசிக்க முடியவில்லை!