வேல. ராமமூர்த்தி, தம்பி மாரிமுத்து, ஜெரால்ட் மில்டன் ஆகிய மூவரும் சகோதரர்கள். தீபா ஷங்கர், இவர்களுக்கு சகோதரி. அருகருகே வசித்து வரும் இவர்களுக்குள், எப்போதுமே சண்டையும் சச்சரவுமாகவே இருக்கிறது. இவர்களுடைய பிள்ளைகள் ஒரு படி மேலே சென்று வெட்டு குத்து ரேஞ்சுக்கு செல்கின்றனர். ஆனால், வேல.ராமமூரத்தியின் மகன் சுரேஷ் நந்தா மட்டும் அனைவருடனும் நேசமாக செல்கிறார். அத்துடன் தீபா ஷங்கரின் மகளும் முறைப்பெண்ணுமான நந்தனாவுடன் காதலாகவும் இருந்து வருகிறார். இதற்கு பிறகு இவர்கள் ஒன்று சேர்ந்தனரா, இல்லையா? என்பது தான் வீராயி மக்கள் படத்தின் கதை.
இயல்பிலேயே கிராமத்து மனிதரான வேல.ராமமூரத்திக்கு அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் கைவசமாகிறது. குடும்பத்தின் மூத்த அண்ணனாக பாசம் காட்டுவதிலும், கண்டிப்பு காட்டுவதிலும் உயர்ந்து நிற்கிறார்.
வேல. ராமமூர்த்தியின் தம்பியாக நடித்திருக்கும் (அமரர்) மாரிமுத்து, தனது இயல்பான நடிப்பின் எளிதாக ரசிகர்களின் மனதினை கவர்ந்து விடுகிறார். உடன் பிறந்தவர்களிடம் கோபம் காட்டுவதிலும், ஊர் பஞ்சாயத்தில் சொத்தை பிரித்துகேட்டு தர்க்கம் செய்வதிலும் சிறப்பாக பரிமளிக்கிறார்.
வீராயி மக்கள் படத்தினை தயாரித்து, நாயகனாக நடித்திருக்கிறார் சுரேஷ் நந்தா. இவரது நடிப்பும் இயல்பாக இருக்கிறது காதலும், நடிப்பும் ஒகே. என்றாலும் ஆக்ஷன் காட்சிகளில் சற்றே அமெச்சூராக தெரிகிறது. சண்டைப் பயிற்சியாளரும் இதை தவிர்த்திருக்க முடியும்! கைவிட்டிருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் நந்தனா. ஆடல், பாடல் எல்லாம் தான் ஓகே! இவரும், சுரேஷ் நந்தாவும் இடம் பெறும் பாடல் காட்சி நன்றாக இருக்கிறது.
வேல. ராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோரின் தங்கையாக நடித்திருக்கும் தீபா ஷங்கர், பெண் ரசிகர்களை அழ வைக்கிறார்.
வேல. ராமமூர்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ரமாவின் நடிப்பு, கச்சிதமாக இருக்கிறது.
மாரிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் செந்தி குமாரி, படம் முழுவதும் சண்டைக்கோழியாக சிலிர்த்து நிற்கிறார். ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் சண்டைகளுக்கு காரணம் இவர் மாதிரியாக பெண்கள் தான் என்பதற்கு சாட்சியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது இவரது கதாபாத்திரம்.
வேல. ராமமூர்த்தியின் கடசி தம்பியாக நடித்திருக்கும் ஜெரால்டு மில்டன், அந்நியப்பட்டு நிற்கிறார்.
இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியின் இசை, ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசனின் இரண்டும் படத்தின் பலம்.
குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் சண்டையை கடந்து, சேர்ந்து வாழ வலியுறுத்தி அதன் அவசியத்தையும் எளிதாக புரிய வைத்திருக்கிறார். திரைக்கதையில் நகைச்சுவை சேர்த்து, படம் முழுவதும் வரும் சோக காட்சிகளை தவிர்த்திருந்தால், வீராயி மக்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும்!
வீராயி மக்கள் – கூட்டுக்குடும்பத்தை வலியுறுத்துகிறது!