வினோத் சேகர் – தினகரன் பாபு ஆகியோரது தயாரிப்பில், உதய் குமார் மற்றும் தயாரிப்பாளர் வினோத் சேகர் இணைந்து இயக்கியிருக்கும் திரைப்படம் லைன் மேன். ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், தமிழ், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு விஷ்ணு கே ராஜா, இசை தீபக் நந்தகுமார். இத்திரைப்படம் எப்படியிருக்கிறது? பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் லைன் மேனாக பணியாற்றி வருபவர் சார்லி. இவரது மகன் ஜெகன் பாலாஜி, பொறியியல் பட்டம் பெற்றவர். புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட அவர், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் விதத்தில் ஒரு தானியங்கி கருவியை கண்டுபிடிக்கிறார். இதற்கான அரசு அங்கீகாரத்தை பெற்று, மேலும் அந்தக்கருவியை பயண்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி செய்கிறார். இந்த விஷயம் அந்த ஊரில் இருக்கும் சோலார் கம்பெனிக்கு தெரிய வருகிறது. இதனால், ஊரிலிருக்கும் ஒருவரின் துணையோடு ஜெகன் பாலாஜியின் அந்த திட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர். ஜெகன் பாலாஜி தனது திட்டத்தை செயல் படுத்தினாரா, இல்லையா? என்பது தான் லைன் மேன் படத்தின் கதை.
கோயமுத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு லைன் மேன் உருவாகியுள்ளது. ஒரு நல்ல நோக்கத்தோடு கண்டுபிடிக்கப்படும் படைப்புகள் எப்படி தடுக்கப்படுகிறது. அரசு அதிகாரிகளின் அணுகுமுறை எப்படி இருக்கிறது, உப்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிலைமை எப்படி இருக்கிறது. என்பதை காட்டியிருக்கிறார்கள்.
தனது கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்தை எதிர்நோக்கி, கணவுகளுடன் திரியும் நாயகனாக ஜெகன் பாலாஜி சிறப்பான உணர்வுகள் மூலம் நெகிழச்செய்கிறார். அவரின் வலிகள் அப்படியே ரசிகர்களிடத்தில் கடத்தப்படுகிறது.
ஜெகன் பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி. நேர்மையான பணியாளராக தனது அனுபவமான நடிப்பின் மூலம்ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
மாவட்ட கலெக்டராக அதிதி பாலன். நாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கதாபாத்திரங்களாக பிரதிபலித்திருக்கிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் திரைக்கதைக்கேற்றபடி இருக்கிறது. பல இடங்களில் சினிமாத்தனம் இருந்தும், ஓகே பரவாயில்லை.
இயக்குநர் எம்.உதய்குமார், ஒரு நேர்மையான மனிதனின் கண்டுபிடிப்புக்காக போராடுவதை எதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘லைன்மேன்’ பாராட்ட வேண்டிய படைப்பு!