தூவல் திரைப்படத்தை, சைகர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார், ராஜவேல் கிருஷ்ணா. இதில், ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதைக்களம் ‘சிங்காரப்பேட்டை’. இந்த ஊரானது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் உள்ளது. தென் பெண்ணையாற்றினை நம்பியே இந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம். இது தவிர, பன்றி வேட்டை, சாராயம் காய்ச்சி விற்கும் வேலையையும் சிலர் செய்து வருகின்றனர். இந்த ஊரின் வனச்சரகர் எளிய மக்களை மிரட்டி, அவர்கள் மூலம் வளங்களை அழிக்கிறார். இந்த ஊர் மக்களின் அன்றாட வாழ்க்கையினை, திரைக்கதையாக சித்தரித்து, இயல்பாக படம்பிடித்து காட்டுவதே தூவல்.
தூவல் என்பது மூங்கில்களின் மூலம் மீன் பிடிக்கும் ஒரு முறை. காலகாலமாக தூவல் முறைப்படி மீன் பிடித்து வரும் ஒரு சமூகம், ஒரு சிலரின் பேராசையால் அந்த மீன்பிடி முறையே முற்றிலுமாக அழிவது, அதன் மூலம் பாதிக்கப்படும் மக்கள் பற்றிய கதை தான் தூவல் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத எதார்த்தமான கதைக்களம். உலகளாவிய அளவில் 40 விருதுகளை வாங்கி உள்ளது.
இப்படத்தில், தயாரிப்பாளர் ராஜ்குமார் வனத்துறை அதிகாரியாக, மக்களை உறிஞ்சி வாழும் மனிதனாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
போர் வெல் நடத்தும் பணப்பேராசை பிடித்த வில்லன் கதாபாத்திரத்தில் சிவம் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது பேராசையால், அழியும் இயற்கையுடன் அவரும் செத்து மிதப்பது, இயற்கையை அழித்து வாழத்துடிக்கும் மனிதர்களுக்கு படிப்பினை.
மாஸ்டர் நிவாஸ், ஒரு சிறிய மீனை பிடிக்க முயற்சிக்கும் அவனது போரட்டமும், பிடித்த மீனை திருப்பி ஆற்றில் விடும் மனித நேயமும், மக்களுக்கு தேவையான முக்கியமான ஒன்று.
மற்றபடி படத்தில் நடித்த இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா உள்ளிட்ட பலரும், அந்த கிரமத்து மனிதர்களாகவே இயல்பாக நடித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டை ‘ஊத்தங்கரை’ கிராமத்தை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவு – S.A. தர்வேஸ், இசை – படமாசதீஷ் இருவரும் படத்திற்கான பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
மொத்தத்தில், தூவல் எளிமையான வாழ்வியலைச் சொல்லும் திரைப்படம்.