‘எக்ஸ்ட்ரீம்’ – விமர்சனம்!

ரக்‌ஷிதா மகாலட்சுமி , அபி நட்சத்திரா, ராஜ்குமார் நாகராஜ், ஆனந்த் நாக் , அமிர்தா ஹல்டேர், சிவம் தேவ், ராஜேஸ்வரி ராஜி, சரிதா, பரோட்டா முருகேசன், ராஜசேகர், ஜெயராஜ் ஜெயா, குட்டி கமலாத்மிகா, மாஸ்டர் கோகுல் ,தனசேகர், ஓட்டேரி சிவா, சந்திரமௌலி உள்ளிட்ட பலரது நடிப்பினில்  வெளியாகியிருக்கும் படம், எக்ஸ்ட்ரீம். ராஜவேல் கிருஷ்ணா இயக்கியிருக்க, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் டிஜே பாலா.

புதிதாக கட்டுமானப் பணிகள் நடைபெறும், ஒரு கட்டிடத்தின் பில்லரை, சென்ட்ரிங் வேலை ஆட்கள் ஒரு பில்லரை பிரிக்கின்றனர். அப்போது அந்த தூணில் ஒரு பெண் பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைய , அடுத்தடுத்து நடக்கும் போலீஸ் விசாரணையில் பல சம்பவங்கள் வெளிவருகின்றன. கொலையை செய்து விட்டு, மக்களுடனே மிகவும் சர்வசாதாரணமாக இருக்கும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது தான் ‘எக்ஸ்டிரீம்’ படத்தின் கதை.

குற்றவாளிகளை புலன் விசாரணை செய்யும் அஸிஸ்டென்ட் எஸ் ஐ ஆக, இப்படத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி சுருதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது உடல்வாகு அழகையும் கம்பீரத்தையும் கொடுத்திருக்கிறது. நடிப்பிலும் குறையில்லை.

ராஜ்குமார் நாகராஜ், விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக  ‘சத்தியசீலன்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது குழந்தையை இழந்து, குற்ற உணர்வால் வருந்தி வாழ்வதிலும், குற்றவாளிகளை பின் தொடரும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டியிருக்கிறார்.

அபிநட்சத்திரா, ஏழைக் குடும்பத்தில் வாழும் பெண்ணாக இருக்கிறார். அப்பாவியாக நடித்து பரிதாபத்தினை ஏற்படுத்துகிறார்.

அம்ரிதா ஹல்டேர் உடைகளில் தாராளம் காட்டி, ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்.

போலீஸ் விசாரணை ஒரு பக்கம்.  அமிர்தா ஹல்டேர், அவரை காதலிக்கும் ஆனந்த நாக் இருவரது காதலில் பெண்ணின் கட்டற்ற சுதந்திரம். அதனால் ஏற்படும் குற்றங்களை இயக்குநர் அழகாக விவரித்து கதை சொல்லியிருப்பது சிறப்பு.

ஒரு காதல் கதை. அதை தொடர்ந்து நடக்கும் ஒரு க்ரைம். இவற்றை முன்னிறுத்தி திரைக்கதையில் அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகள் மூலம் ரசிக்கும்படி செய்துள்ளனர்.

மொத்தத்தில், ஒரு சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘எக்ஸ்ட்ரீம்’ க்ரைம் திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கலாம்.