சத்யா, டேனியல் ஆனி போப், ஜெயபிரகாஷ், தீபா சங்கர் சென்றாயன், ‘ராஜா ராணி’ பாண்டியன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகி இருக்கும், படம்’ ராபர்’. ‘மெட்ரோ’ படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுத, அவரது உதவியாளரும், அறிமுக இயக்குநருமான எஸ். எம். பாண்டி இயக்கியிருக்கிறார். க்ரைம் த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை, ‘இம்ப்ரஸ் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘மெட்ரோ புரொடக்ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் சார்பில், பத்திரிக்கையாளர் எஸ். கவிதா மற்றும் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
கதையின் நாயகனான சத்யா- படிப்புக்கேற்ற வேலையைத் தேடி சென்னை மாநகரத்திற்கு வருகிறார். இங்கு ஐடி துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறார். ஆனால், அவருக்கு வாழ்க்கையை உல்லாசமாகவும், சொகுசாகவும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக தங்க நகை சங்கிலி பறிப்பு, வழிப்பறிக் கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார். அத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்கிறார். இந்தத் தருணத்தில் பெண் ஒருவரின் தங்க நகை சங்கிலியை பறிக்கும்போது துணிச்சல் மிக்க அந்தப் பெண் அவரை துரத்துகிறாள். ஆனால், எதிர்பாராத விதமாக, அந்தத் தருணத்தில் அவள் இறந்துவிடுகிறாள். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்குகிறது. சட்டபூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கவில்லை. இதனால், தன் மகளின் இறப்பிற்கு பழி வாங்குவதற்காக அந்தப் பெண்ணின் தந்தை தீர்மானிக்கிறார். அதே தருணத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் நாயகனுக்கும், கும்பலுக்கும் இடையே மோதலும் ஏற்படுகிறது. இதிலிருந்து கதையின் நாயகன் தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
கதையின் நாயகனான நடிகர் சத்யா, தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி, நடித்து இருக்கிறார். குற்ற செயலுக்கு ஏற்ற சிகை அலங்காரம் – குற்ற செயலின் ஈடுபடும்போது தவிப்பும், துடிப்பும் கொண்ட நடிப்பு, உல்லாச வாழ்க்கை வாழும் போது கொண்டாட்ட நடிப்பு, என பல பரிமாணங்களை காட்டி, ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
படத்தின் கிளைமாக்ஸ், எளிதாக யூகிக்க முடிந்தாலும், ரசிகர்களுக்கு ஒரு பரபரப்பினை ஏற்படுத்துகிறது.
ஜெய பிரகாஷ் மற்றும் ஓய்வு பெற்ற காவலரான ‘ராஜா ராணி’ பாண்டியன் ஆகிய இருவர் தான் கதையின் நாயகர்கள். இவர்களில் சாதாரண மனிதரான ஜெயப்பிரகாஷ், தகாத வார்த்தைகளை பேசி தங்களுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்துவதும், இவர்கள் இருவரும் குற்றவாளிக்கு நேரடியாக தண்டனை வழங்க நினைப்பதும், சரி என்றாலும் இயக்குநர் இதைவிட சுவாரசியமான உச்சகட்ட காட்சியை அமைத்திருப்பது படத்திற்கு பலமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவும், ஜோகன் சிவனேஷ் இசையமைப்பும் படத்தின் பலமாக இருக்கிறது.
டேனி, சென்ட்ராயன், தீபா சங்கர் ஆகியோரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், ‘ராபர்’ திகில் ஏற்படுத்துகிறது!