‘வாமா என்டர்டைன்மென்ட்’ சார்பில், ஜாஹிர் அலி தயாரித்து, வினிஷ் மில்லேனியம் இயக்கத்தில், யோகி பாபு , சாந்தி ராவ், ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி , அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ் , மேனகா , நைரா நிஹார் ஆகியோரது நடிப்பினில் வெளிவந்துள்ள படம், ‘ஜோரா கைய தட்டுங்க’. எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
யோகிபாபுவின் அப்பா மாயாஜால வித்தைகளில் புகழ் பெற்று விளங்குகிறார். தனக்கு பிறகு அந்த விததியை மகன் யோகிபாபு தொடர் பெரிதும் பிரயத்தனம் படுகிறார். ஆனால் யோகிபாபுவின் நிதானமின்மையினாலும், தாழ்வுமனப்பான்மையினாலும் அது கைகூடவில்லை. ஒரு நாள், தீயிலிருந்து வெளிவரும் மாயாஜால வித்தையில் பரிதாபமாக உயிரை இழக்கிறார், யோகிபாபுவின் அப்பா. அதன் பிறகு ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள ஒரு பாழடைந்த வீட்டில், மாயாஜால வித்தையை பயின்று வருகிறார். அவ்வப்போது அதை மக்களிடமும் செய்து வருகிறார். ஆனால், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் யோகிபாபுவை விரும்பும் பெண்னை சிலர் கிண்டல் செய்ய, அது சண்டையில் முடிகிறது. அதன் தொடர்ச்சியாக யோகிபாபுவின் கை வெட்டப்படுகிறது. எப்படியாவது மாயாஜால வித்தையில் பிரகாசிக்க நினைத்திருந்த யோகிபாபு, அவரது கை வெட்டப்பட்டதால் தவிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘ஜோரா கைய தட்டுங்க’.
படம் முழுவதும் வலம் வரும் யோகிபாபுவின் நடிப்பும், திரைக்கதை அமைப்பும் படத்தின் மிகப்பெரும் பலவீனம். யோகிபாபுவின் வழக்கமான, சிரிக்க வைக்கும் பஞ்ச் டைலாக்குகள் இல்லாமலும், சுவாரசியமின்றி, சலிக்க வைக்கும் காட்சி அமைப்புகள், கடுமையான சோர்வைத் தருகின்றன.
யோகிபாபுவைச் சுற்றி வரும் நாயகியாக நடித்திருக்கும் சாந்தி ராவுக்கு, நடிப்பதற்கோ, பெர்ஃபார்மென்ஸ் பண்ணுவதற்கோ, பெரிய வேலை ஒன்றுமில்லை.
அய்யோ பாவம் போலீஸாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, சாந்தி ராவ், கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி , அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ் , மேனகா , நைரா நிஹார் என அனைவரும் பெயரளவிற்கு நடித்திருக்கிறார்கள். கல்கி சாந்தி ராவ், நடிப்பெல்லாம் கொடுமை!
படத்திற்கு, ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டின் ஒளிப்பதிவும் பெரிய பலவீனம் தான். ஏகப்பட்ட காட்சிகளுக்கு தேவையில்லாத குளோசப் ஷாட்ஸ், மற்றும் ஒரே இடத்தில் நின்று கொள்ளும் கேமிரா, அதற்குள் வந்து நடித்து விட்டுப்போகும் நடிகர்கள். என ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கேமிரா, காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது
இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரியின் பாடல்களும், ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசையும் சுமார்!
ஒரு பாலியல் வன்முறைக்கு பழிவாங்கும் ஒருவன், போலீஸுக்கு எந்த தடையமும் இல்லாமல் மாயாஜாலத்தால் அதை செய்து முடிக்கிறான். இது கதை. அதை விறுவிறுப்பாகவும், திகிலாகவும் சொல்ல வேண்டியதற்கு பதிலாக சோர்வான, விறுவிறுப்பற்ற திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார், இயக்குநர் வினிஷ் மில்லேனியம்.
மொத்தத்தில், ‘ஜோரா கைய தட்டுங்க’ – கிரிகாலன் மேஜிக் ஷோ!