‘மாமன்’ – (விமர்சனம்) உறவுகளின் தவிப்பும், போராட்டமும்!

கருடன் வெற்றிக்கு பிறகு, ‘லார்க் ஸ்டுடியோ’ சார்பில் கே. குமார் தயாரித்துள்ள படம் மாமன். இதில் நாயகன், நாயகியாக சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்க, அவர்களுடன் சுவாசிகா, மாஸ்டர் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், ராஜ்கிரண், கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர், சாயா தேவி, மிதிலா சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதையை சூரி எழுதியிருக்க, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார், பிரசாந்த் பாண்டியராஜ்.

சூரிக்கு தனது அக்கா சுவாசிகா மீது கொள்ளைப் பிரியம். அவருக்காக, எதை வேண்டுமானாலும் செய்வார். இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்புடன் வாழ்ந்து வருகிறார்கள். சுவாசிகாவிற்கு திருமணமாகி வருடங்கள் பல சென்ற நிலையில், குழந்தை இல்லாமல் இருந்து வருகிறார். இதனால், அவரது கணவர் பாபா பாஸ்கர் வீட்டார், மற்றபிற உறவினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வருகிறார். இதிலிருந்து விடுபெறுவதுபோல் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திளைக்கிறது. அக்காவில் காட்டும் அன்பினைப் பார்த்து சூரியிடம் மனதை பறி கொடுக்கிறார், ஐஸ்வர்யா லட்சுமி. திருமணமும் முடிகிறது.

சூரி சதாநேரமும் அக்கா சுவாசிகாவின் குழந்தையுடன் இருக்கிறார். அக்காவின் மீது கொண்ட அன்பை விட அதிக பாசம் வைக்கிறார் அந்த குழந்தையிடம். இதனால், கணவன், மனைவியான சூரிக்கும், ஐஸ்வர்யா லட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகின்றனர்.  இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே ‘மாமன்’

சூரிக்கு சற்றே அழுத்தமான கதாபாத்திரம். அதை லாவகமாக கையாண்டு, பெண் ரசிகைகளை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளார். கலகலப்பான காட்சிகளில் கலகலப்பாகவும், அழுத்தமான காட்சிகளில் படம் பார்ப்பவர்களை கண்கலங்கவும் செய்து விடுகிறார். அக்கா மீது காட்டும் அன்பு. காதல் மனைவியிடம் காட்டும் நெருக்கம். அக்கா மகன் மீது காட்டும் அன்பு. தன் தவறை உணர்ந்து வருந்தும் காட்சி, என அனைத்து விதமான காட்சிகளிலும் திறம்பட நடித்துள்ளார். குறிப்பாக, சுவாசிகாவிற்கு ஸ்கேன் எடுக்கப்படும் காட்சியில் ஒட்டுமொத்த பெண்குலத்தின் நெஞ்சங்களையும் சுருட்டிவாரிக் கொள்கிறார்.

சூரியின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு சூப்பர். அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் சிறப்பு. கோபம், ஏமாற்றம், விரக்தி என அனைத்தையும் சிறப்பான நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கணவன் மனைவியாக நடித்திருக்கும், ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் இவர்கள் இருவரது கதாபாத்திரமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார், சுவாஷிகா.  இவரது கதாபாத்திர வடிவமைப்பு முரணாக இருந்தபோது நடிப்பு சிறப்பு!

சுவாசிகாவின் கணவராக நடித்திருக்கும் பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை ஓகே.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு குறை சொல்லும்படி இல்லை.

திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், குடும்ப உற்வுகளுக்குள் நடக்கும் பிரச்சனைகளை அழகாக கோர்த்து அதை ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார்.

அதிலும் கல்யாணம், காது குத்து, சீமந்தம் என எந்தெந்த இடங்களில் உறவுகளுக்குள் பிரச்சனை நிகழுமோ அதை சிறப்பாக கோர்த்து, சுவாரசியத்தினை ஏற்படுத்தியிருக்கிறார். அதுவும் பெண்ரசிகைகளுக்கு ஏற்றபடி செய்திருப்பது சிறப்பு. அது தாய்மார்களை நிச்சயம் கவரும்.

‘மாமன்’ – குடும்பத்துடன் பார்க்க வேண்டிய, பெண்களின் பெருமை பேசும் படம்!