‘ஸ்கூல்’ – விமர்சனம்!

பள்ளிகளுக்குள்ளே, தர வரிசையில் முதலிடத்தை பிடிக்க, இரண்டு பள்ளி முதல்வர்களுக்கிடையே நடக்கும் போட்டியால், மாணவர்களின் உயிர் எப்படி பறிபோகிறது? என்பது தான் ‘ஸ்கூல்’ படத்தின் கதை.

பள்ளியின் தலைமை ஆசிரியரான பகவதி பெருமாள், மாணவர்கள் தேர்வுகளில் எப்படி அதிக மதிப்பெண்களை பெற வேண்டும். என்பதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை எழுதி அதை மாணவர்களிடையே விநியோகம் செய்கிறார். அதை படிக்கும் மாணவர்கள் எதிர்மறையான சிந்தனைக்கு செல்கின்றனர். அதாவது வெற்றி பெற்றால் மட்டுமே வாழ்க்கை. இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு செல்வதோடு, மாணவர்கள் சாதிய பாகுபாடுக்கு ஆளாகின்றனர். உயிர் பலிகளும் நடக்கிறது. இதை தடுத்து மாண்வர்களை நல்வழி படுத்தும் நோக்கில், ஆசிரியர்கள் யோகிபாபுவும், பூமி சாவ்லாவும் முயற்சிக்கின்றனர். அது சாத்தியமானதா, இல்லையா?

மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர் கனகவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, காமெடியை கைவிட்டு குணச்சித்திர கதாபாத்திரமாக வலம் வருகிறார். இயக்குநரின் தேவையறிந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.

மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் ஆசிரியையாக நடித்திருக்கும் பூமிகா சாவ்லாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய கதாபாத்திரம் இல்லை. பள்ளியில் நடக்கும் அமானுஷ்யமான கொலைகளை விசாரிக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், குறிப்பிடும்படியான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.

மற்றபடி, பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், அவருக்கு உதவியாளராக நடித்திருக்கும் சாம்ஸ், மந்திரவாதி ‘மஸ்தான்’ என்ற மந்திரவாதி வேடத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, தீய சக்திகளை கண்டுபிடித்து அழிக்கும் ‘உலகநாத சுவாமி’யாக நடித்திருக்கும், படத்தினை இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன் இன்ன பிற நடிகர், நடிகைகள் அனைவரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

இசை இளையராஜா. பாடல்களும், பின்னணி இசையும் சுமார்! ஒளிப்பதிவு ஆதித்யா கோவிந்தராஜ். ஓகேவான ஒளிப்பதிவு?

மாணவர்களும், அவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன். பள்ளியில் படிக்கும் காலத்தில் வெற்றி, தோல்வியை மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை. அவரவர் திறமைக்கு ஏற்ப, எல்லாத்துறையிலும் சாதிக்கலாம் என்பதை சொல்லி மாணவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார்.

‘ஸ்கூல்’ – ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்!