‘ஏஸ்’ (ACE) –  விமர்சனம்!

‘ஏஸ்’ (ACE) படத்தினை, ‘7Cs எண்டர் டெய்ன்மெண்ட்’  நிறுவனம் சார்பில், ஆறுமுக குமார் தயாரித்து, இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி , ருக்மணி வசந்த் , யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவர்களுடன் திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ், கே ஜி எஃப் புகழ் பி.எஸ். அவினாஷ், ராஜ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, கரண் பி.ராவத். இசை, ஜஸ்டின் பிரபாகரன். பின்னணி இசை, சாம் சி.எஸ்.

இந்தியாவிலிருந்து மலேஷியாவிற்கு செல்லும் விஜய் சேதுபதி, திவ்யா பிள்ளை – யோகிபாபு ஆகியோர் ஆதரவுடன், அவர்கள் நடத்தி வரும் உணவகத்தில் வேலைக்குச் சேர்கிறார். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும், ருக்மணி வசந்துடன் காதல் ஏற்படுகிறது.  இருவரும் நெருக்கமாக பழகி வரும் நிலையில், ருக்மணியின் பணத்தேவையை பூர்த்தி செய்ய பி.எஸ்.அவினாஷிடன் பணம் வாங்கச் செல்கின்றனர். அங்கு நடக்கும் சூதாட்டத்தில் கலந்து கொள்ளும் விஜய் சேதுபதி கோடிக்கணக்கில் பணத்தினை இழக்கிறார். சிறு கடன் வாங்கச்சென்றவரகள் பெரும் கடன்காரார்களாக மாறி, பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.  ஒரு சில நாட்களில் இந்த கடனை அடைக்கவில்லை என்றால் உயிர் போய் விடும் நிலையில், அந்தகடனை, விஜய் சேதுபதியும் – யோகிபாபுவும் எப்படி? அடைக்கிறார்கள். என்பதே ‘ஏஸ்’.

விஜய் சேதுபதி, ‘போல்ட் கண்ணன்’ என்ற ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில், தனது வழக்கமான நடிப்பின் மூலம் ரசிகர்களை, எளிதில் கவர்ந்து விடுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் காதலியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், தன்னுடைய வசீகரத்தாலும் நடிப்பாலும் ரசிகர்களை, வெகுவாக கவர்ந்து விடுகிறார்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு யோகிபாபுவின் காமெடிகள், ஆங்காங்கே சிரிப்பினை வரவழைக்கிறது.

மற்றபடி திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ், கே ஜி எஃப் புகழ் பி.எஸ். அவினாஷ், ராஜ் குமார் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கவரும் அம்சமாக, ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது. மலேஷியாவின் சந்து, பொந்துகளை  இதுவரை யாரும் காட்சிப்படுத்தாத வண்ணம் காட்சிப்படுத்தியிருக்கிறார், கரண் பி.ராவத்.

ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் ஓகே! சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது. ஃபென்னி ஆலிவர், படத்தின் நீளத்தில் கவனம் செலுத்தவில்லையோ? என்று தோன்றுகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வினை சரிப்படுத்தியிருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் ஆறுமுககுமார், சினிமா சுதந்திரத்தினை ஏகபோகமாக பயன்படுத்தியிருப்பதால், சுவாரசியம் போதுமானதாக இல்லை. குறிப்பாக வங்கிக் கொள்ளைக் காட்சிகளை சொல்லலாம்!

மற்றபடி, ‘ஏஸ்’ விஜய் சேதுபதி ரசிகர்களுக்கான படம்!